காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட சிறுவன் : இருவர் மீது குற்றச்சாட்டுகள்

காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட சிறுவன் : இருவர் மீது குற்றச்சாட்டு

பொறுப்பற்ற அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக இரண்டு நபர்கள் இன்று ரெம்பாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், நகரும் வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் இரண்டு வயது சிறுவன் காயமடைந்தான்.

மாஜிஸ்திரேட் டான் சாய் வீ முன் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் நபில் ஹரிஸ் ஜெஃப்ரிடின் (23), மற்றும் பி. தயாளன் (20) ஆகிய இருவருக்கும் தனித்தனியாக குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.

பிப்ரவரி 10 ஆம் தேதி பிற்பகல் 3.21 மணியளவில் சேனாவாங் அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் இருவரும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்துச் சட்டம் 1987 Road Transport Act (APJ) 1987-இன் பிரிவு 42 (1) இன் கீழ் இந்த குற்றச்சாட்டு விதிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், RM15,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.

பிப்ரவரி 10 ம் தேதி, இருவருமே ஆபத்தாக வாகனம் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர், மற்றொரு குடும்பத்திற்குச் சொந்தமான வாகனம் மீது மோதியதின் விளைவாக ஒரு குழந்தை காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின்னர் காயமடைந்துள்ளார்.

முன்னதாக, துணை அரசு வக்கீல் உம்மி அமிரா நடாஷா அசார் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 7,000 ஜாமீன் வழங்கக் கோரினார். அதே நேரத்தில் நபில் ஹரிஸை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் முஹம்மது ஃபர்ஹான் அஹ்மத் ஃபட்ஸில் தனது கட்சிக்காரர் ஒரு பல்கலைக்கழக மாணவர் என்றும் வருமானம் இல்லை என்ற காரணத்தாலும் குறைந்த ஜாமின் தொகையை கோரியுள்ளார்.

வழக்கறிஞரால் பிரதிநிதித்துவம் செய்யப்படாத தாயளனும், குறைந்த ஜாமீனுக்காக முறையிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா RM4,000 ஜாமீன் வழங்கப்பட்டு, மார்ச் 17-ஐ அடுத்த நீதிமன்ற தேதியாக குறிப்பிடவும் அனுமதித்தது. இருவரும் ஜாமீனை செலுத்தியுள்ளனர்.