அன்வார், லிம் குவான் எங், இன்று காலை மகாதீரை சந்திக்கத் திட்டம்

அன்வார் இன்று காலை மகாதீரை சந்திக்க திட்டம்

பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று காலை பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அன்வார் மகாதீரை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் காலை 9.30 மணிக்குள் சந்திப்பார்” என்று ஒரு பி.கே.ஆர். தலைவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இரு தலைவர்களும் என்ன விவாதிப்பார்கள் என்று தெரியவில்லை என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.

அன்வார் இன்று பிற்பகல் பேரரசரையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நிதியமைச்சர் லிம் குவான் எங்கும் இன்று காலை பிரதமர் கட்டிடத்திற்குள் நுழைவதைக் காண முடிந்தது.

டிஏபி பொதுச்செயலாளரான லிம், காலை 9.30 மணியளவில் வந்ததாகத் தெரிகிறது.

நேற்று, பி.கே.ஆரின் அஸ்மினின் குழுவினர், பெர்சத்து, அம்னோ, பாஸ், ஜி.பி.எஸ் மற்றும் வாரிசன் தலைவர்கள் பேரரசரை அகோங்கை சந்தித்தனர்.

அன்வார் தனது துணைத்தலைவர் அஸ்மின் அலி, பெர்சத்து, அம்னோ, பாஸ், ஜிபிஎஸ் மற்றும் வாரிசன் சம்பந்தப்பட்ட தற்போதைய அரசியல் சூழ்ச்சியை ஒரு துரோகம் என்று விவரித்தார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அவர் ஒப்புக் கொண்டார். மேலும் அது கூடிய விரைவில் நிறைவேறும் சாத்தியம் உள்ளது என்று நம்புகிறார்.

முன்னதாக நேற்று, பெர்சத்து தலைவர்கள் மகாதீரை அதன் தலைமையகத்தில் சந்தித்தனர், அஸ்மினின் குழு ஷெரட்டன் ஹோட்டலில் சந்திப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அம்னோ, மெனாரா டத்தோ ஒன்னில் ஒரு உச்சசபைக் கூட்டத்தை நடத்தியது. அதே நேரத்தில் சரவாகின் ஜி.பி.எஸ் கூட்டணி ரிட்ஸ்-கார்ல்டனில் கூடியது. அதில் சபாவின் வாரிசனும் இணைந்தது.

இந்த ஆறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பின்னர் பெட்டாலிங் ஜாயா, ஷெரட்டனில் சந்தித்தனர்.

MIC தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, பெர்சத்து ஹராப்பானை விட்டு வெளியேறக்கூடும் என்றும், அஸ்மின் பி.கே.ஆரை விட்டு விலகினார் என்றும் கூறினார். இதை அஸ்மின் உறுதிப்படுத்தவில்லை.

இன்று காலை வரை இந்த விவகாரம் குறித்து மகாதீர் அல்லது எந்த தரப்பினரிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

மகாதீர் பெர்சத்து கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டார். ஆனால் இஸ்தானா நெகாரா மற்றும் ஷெராடனில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.