எம்.ஏ.சி.சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் லத்தீபா

எம்.ஏ.சி.சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் லத்தீபா

லத்தீபா கோயா, எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் பதவியை ராஜினாமா செய்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.

லத்தீபா தனது இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில், ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றிய பின் ராஜினாமா செய்திருப்பது அவரின் சுய முடிவு என்று கூறியுள்ளார்.

“MACC-இன் தலைமை ஆணையர் பதவியை ராஜினாமா செய்வதற்கான எனது விருப்பத்தை தெரிவிக்கும் ஒரு கடிதத்தை பிரதம மந்திரி முகிதீன் யாசினுக்கு சமர்ப்பித்துள்ளேன். அது மாட்சிமை தங்கிய பேரரசர் ஒப்புதலுக்கும் உட்பட்டது.

“இவ்வாறு செய்வது எனது சொந்த முடிவு. அழுத்தம் காரணமாக நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்ற ஊகம் ஆதாரமற்றது.

“ஒரு மனித உரிமை வழக்கறிஞராக நான் மீண்டும் பணியாற்ற திரும்புவதே எனது நோக்கம்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல், அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களால் நியமிக்கப்பட்ட லத்தீபா, இந்த பதவியை விட்டு விலகுவதற்கான தனது முடிவை விளக்க நேற்று முகிதீனை சந்தித்ததாக கூறினார்.

முன்னாள் பி.கே.ஆர். தலைவரும், லாயர்டிஸ் ஃபார் லிபர்ட்டி (எல்.எஃப்.எல்)/Lawyers for Liberty (LFL) உரிமைக் குழுவின் நிர்வாக இயக்குநருமான லத்தீபா, தனது ராஜினாமா ஊழலுக்கு எதிரான போராட்டத்தை பாதிக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“MACC வழக்கம் போல் செயல்படும். MACC எனது திறைமையான அதிகாரிகளின் கைகளில் உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பிப்ரவரி 28 அன்று ராஜினாமா செய்த மற்றொரு உயர் அரசு ஊழியர் – அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது ராஜினாமா அறிக்கையின் பகுதி, கீழே:

மார்ச் 2, 2020 திங்கட்கிழமை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தலைமை ஆணையர் பதவியை ராஜினாமா செய்வதற்கான எனது விருப்பத்தை தெரிவிக்கும் கடிதத்தை பிரதமர் முகிதீன் யாசினுக்கு சமர்ப்பித்தேன்.

அவ்வாறு செய்வது எனது சொந்த முடிவு. என் மீது அழுத்தம் கொண்டுவரப்பட்டது என்ற ஊகங்கள் ஆதாரமற்றவை.

ஒரு மனித உரிமை வழக்கறிஞராக எனது பணிக்கு திரும்புவதே எனது நோக்கம்.

நேற்று, நான் பிரதமரை சந்தித்து ராஜினாமா செய்வதற்கான எனது முடிவை அவருக்கு விளக்கினேன். நாங்கள் மிகவும் அன்பான கலந்துரையாடலை மேற்கொண்டோம். அவர் எனது நிலைப்பாட்டை புரிந்துகொண்டார்.

திருடப்பட்ட 1MDB/1எம்.டி.பி பணத்தை வெளிநாட்டிலிருந்து மீட்டெடுப்பதற்கான எங்கள் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்தும் பிரதமருக்கு விளக்கினேன். இந்த நடவடிக்கைகளுக்கு அவர் முழு ஆதரவளித்தார்.

மக்களின் நலன்களை முன்னேற்றுவதில் வெற்றியடைய அவருக்கும் புதிய அரசாங்கத்திற்கும் வாழ்த்துகளை தெரிவிக்கும் வாய்ப்பையும் நான் பெற்றேன்.

கடமைகளை ஒழுங்காக ஒப்படைப்பதை உறுதி செய்வதற்காக, இந்த வாரம் முழுவதும், எனது துணை அதிகாரி ஆசாம் பாக்கி மற்றும் எம்.ஏ.சி.சி துறை தலைவர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளேன்.

MACC என் திறமையான அதிகாரிகளின் கைகளில் வழக்கம்போல செயல்படும்.

குற்றவாளிகளின் நிலைப்பாடு அல்லது அரசியல் விசுவாசத்தைப் பொருட்படுத்தாமல், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் MACC தொடர்ந்து சமரசமற்று அயராது உழக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் எனது பதவியை விட்டு வெளியேறுகிறேன்.

முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மகாதீர், எம்.ஏ.சி.சி-யில் எனது சகாக்கள் மற்றும் தலைமை ஆணையராக இருந்த காலத்தில் எனக்கு கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நன்றி.

கடவுள் நம் நாட்டை காப்பாற்றுவார்!