கொழும்பு; இலங்கை கடல் பகுதியில், 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய போதைப் பொருட்களை, இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
அண்டை நாடான இலங்கையில், கடலோர பகுதியில் கடற்படையினரும், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கொழும்பு துறைமுகம் அருகே, இரண்டு கப்பல்களில் இருந்து, இலங்கையின் மீன்பிடி படகில், சிலர் பொருட்களை ஏற்றுவதை, கடற்படையினரும், போலீசாரும் பார்த்தனர். உடனே, அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு, இலங்கை மீன்பிடி படகில், போதைப் பொருட்கள் ஏற்றப்படுவது தெரிந்தது. இரண்டு கப்பல்களையும் கைப்பற்றிய போலீசார், அவற்றை சோதனையிட்டனர்.அவற்றில், 600 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள, போதைப் பொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்,
இது தொடர்பாக, கப்பல்களில் இருந்த, 21 பேரை கைது செய்தனர். இவர்களில், ஐந்து பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்; மற்றவர்கள் வெளிநாட்டினர்.போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்ட இரண்டு கப்பல்களும், வெளிநாட்டு கப்பல்கள் என தெரிவித்த போலீசார், மற்ற விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். ‘இலங்கை கடல் பகுதியில், 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்படுவது, இதுவே முதல் முறை’ என, போலீசார் தெரிவித்தனர்.
dinamalar