கொரோனா வைரஸ்: இத்தாலி, இரான், கொரியாவில் இருந்து இலங்கை வந்தவர்கள் சோதனை செய்யாமல் ஊருக்கு சென்றது உறுதி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், புத்தளம் மாவட்டத்திற்கும், கொச்சிக்கடை போலீஸ் பிரிவிற்கும் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போலீஸ் ஊரடங்கு சட்டம் இன்று மாலை 4.30 மணி முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை அமலில் இருக்கும் என பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் கறுவலகஸ்வெவ, வண்ணாத்திவில்லு, நவகத்தேகம, முந்தல், உடப்பு, சாலியவெவ, நுரைச்சோலை உள்ளிட்ட 18 போலீஸ் பிரிவுகளுக்கு இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்குடனேயே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அஜித் ரோஹண கூறுகின்றார்.

குறித்த பகுதியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைக்கு இந்த ஊரடங்குச் சட்டத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அத்துடன், குறித்த பகுதி ஊடாக பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

புத்தளம் மற்றும் கொச்சிக்கடை பகுதிகளுக்கு மாத்திரம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க காரணம்?

இலங்கைக்கு கொரோனா தொற்றானது, இத்தாலியின் ஊடாகவே தொற்றியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட இலங்கையர், இத்தாலி நாட்டு பிரஜைகளுடன் சுற்றுலா சென்றிருந்த நிலையிலேயே அவருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருந்தது.

சுற்றுலா வழிக்காட்டியாக செயற்பட்ட குறித்த நபருக்கும், அவருடன் பழகிய மற்றுமொரு நபருக்கும் முதலில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதுமாத்திரமன்றி, இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த பலருக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தருவோரை 14 நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

குறித்த நடவடிக்கையை கடந்த முதலாம் தேதி ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்த நிலையில், மருத்துவ கண்காணிப்பிற்காக வத்தளை பகுதியிலுள்ள மருத்துவமனையொன்று தயார்ப்படுத்தப்பட்டது.

எனினும், தமது பிரதேசத்தில் இவ்வாறான மருத்துவ கண்காணிப்பு நிலையமொன்று கொண்டு வரப்படுவதானது, அபாயகரமானது என பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த மருத்துவ கண்காணிப்பு நிலையத்தை கந்தகாடு பகுதிக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்தது.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க சுமார் 10 நாட்கள் தாமதமாகிய பின்னணியில், மார்ச் மாதம் 10ஆம் தேதியே முதலாவது பிரிவினர் மருத்துவ கண்காணிப்புக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

எனினும், அரசாங்கம் திட்டமிட்ட காலத்தில் இத்தாலி, தென்கொரியா மற்றும் இரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த பலர் மருத்துவ கண்காணிப்புக்களை மேற்கொள்ளாது, தமது சொந்த ஊருக்கு சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இத்தாலியில் வசிக்கும் பெரும்பாலானோர் புத்தளம் மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

புத்தளம் மற்றும் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சுமார் 800ற்கும் அதிகமானனோர் கடந்த முதலாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்.

அவ்வாறு வருகைத் தந்தவர்களை சுய மருத்துவ கண்காணிப்புக்கு ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் கோரியிருந்த போதிலும், அவர்கள் அதனை பொருட்படுத்தாது நாட்டின் பல பகுதிகளுக்கும் நடமாடி வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

இந்த நிலையிலேயே, குறித்த நபர்களிடமிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இந்த வைரஸ் தொற்று பரவாதிருப்பதை நோக்கமாக கொண்டு போலீஸார் இன்று இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் கொண்ட பகுதிகளாக, புத்தளம், கொழும்பு மாவட்டங்களும், தென் மாகாணமும் காணப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 212 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 2258 பேர் மருத்துவ கண்காணிப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

bbc