இலங்கை சிறைச்சாலையில் கொரோனா பாதிப்பா? போராடிய கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டு நாடு முடங்கியுள்ள நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் பாரிய அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்த அமைதியின்மை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

சம்பவத்தில் மேலும் நால்வர் காயமடைந்து, அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள், கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்த சந்தர்ப்பத்தில், அதனை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் முயற்சித்த வேளையிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது, சிறைச்சாலையிலிருந்து கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்சித்ததாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் காயமடைந்து அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கைதிகள் எவரும் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்லவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

எனினும், சிறைச்சாலைக்குள் தற்போது தீபரவி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அநுராதபுரம் போலீஸார், கலகத் தடுப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிபடையின் சிறைச்சாலை வளாகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சிறைச்சாலைக்குள் கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை கைதிகள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் மற்றும் அநுராதபுரம் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

bbc