இலங்கையில் தமிழர் பகுதியில் கொரோனா தொற்று:வட மாகாண பகுதிகளின் நிலை இதுதான்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இன்றைய தினம் புதிதாக நான்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 222 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 81 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

தமிழர்கள் அதிகளவில் வாழும் யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுவிஸர்லாந்திலிருந்து வருகை தந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவருடன் சந்திப்பு நடத்திய ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிஸர்லாந்திலிருந்து கடந்த 10ஆம் தேதி கிறிஸ்தல மதகுருவொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வருகைத் தந்ததுடன், அவர் கடந்த 15ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மத நிகழ்வொன்றிலும் கலந்துகொண்டுள்ளார்.

இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்த மதகுரு 15ஆம் தேதியே யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு, சுவிஸர்லாந்து நோக்கிப் பயணித்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், சுவிஸர்லாந்திற்கு சென்ற மதகுருவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரை சந்தித்தவர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் திரட்டி வந்துள்ளனர்.

இவ்வாறு குறித்த மதகுருவுடன் சந்திப்பொன்றை நடத்திய ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் யாழ்ப்பாணத்திலிருந்து அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 17 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்தவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவருக்கு மாத்திரம் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாணத்திற்கு ஊரடங்கு நீடிப்பு

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் நாளை மறுதினம் (24) அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை மறுதினம் (24) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்திலுள்ள மக்கள் தமது மாவட்டங்களை விட்டு, வெளி மாவட்டங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிஸர்லாந்திலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, சுவிஸர்லாந்து நோக்கி மீண்டும் சென்ற மதகுருவுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் சந்திப்புக்களை நடத்தியவர்களை அடையாளம் காணும் வகையிலேயே இந்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

அத்துடன், குறித்த மாகாணத்திலுள்ள ஏனையவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவாதிருக்கும் வகையிலும் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 790 பேர் கைது

இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

கடந்த 20ஆம் தேதி மாலை 6 மணி முதல் இன்று மாலை 5 மணி வரையான காலப் பகுதிக்குள் அரசாங்கத்தின் உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 790 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த காலப் பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் பயணித்த 154 வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

bbc