ஏ.சி.எம் பௌசுல் அலிம்
ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் முக்கிய மாநாட்டை கூட்டி இருக்கிறார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு காவல்துறை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலகம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுடன் தற்போதைய நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதால் இதற்கு எத்தகைய மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய விசேட நேர்காணலின் போது தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக தேர்தலை விரைவில் நடத்துவதாக இருந்தால் அதன் செலவினம் மூன்று மடங்காக அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏற்கனவே பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 750 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று இருந்து விடுபடுவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால். இந்தத் தொகை 2500 கோடி ரூபாயையும் தாண்டலாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இன்று நடைபெறும் மாநாட்டின்போது ஆராயப்படும் விடயங்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தேர்தலை உடனடியாக நடத்துவது அசௌகரியமான காரியங்களை சுட்டிக்காட்டி இருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இதனை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த மாநாட்டை கூட்டுவதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தின் கீழ் மார்ச் மாதம் முதலாம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கான அறிவித்தல் வர்த்தமானி மூலம் பிரகடனபடுத்தப்பட்டது என்றாலும் கூட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட இறுதி நாளன்று நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைதற்கு தீர்மானித்தோம் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடையில் மீண்டும் கூடி இறுதி முடிவு ஒன்றை எடுக்க எண்ணி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போதைய நிலையில் தேர்தலை இன்னும் மூன்று மாதங்களில் கூட நடத்த முடியுமா என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதால் சுதந்திரமாக மக்களால் வாக்களிக்க முடியுமா என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டு இருக்கின்றது.
அதேசமயம் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் நெருக்கடி நிலை காணப்படுகிறது. வாக்களிப்பு நிலையங்களில் மக்களை திரட்டுவதும் அதிகாரிகளின் கடமைகளை முன்னெடுப்பது நெருக்கடியான நிலை அதிகமாக காணப்படுவதால் இதற்கு மாற்று தீர்வை காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு இந்த மாநாட்டை கூட்டி இருப்பதாகவும் இந்த மாநாட்டில் நாங்கள் கலந்துரையாடல் விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தி அவருடைய கருத்தையும் கேட்டறிய தீர்மானித்திருக்கிறேன்.
அடுத்த கட்டமாக கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களுடன் இது விடயம் தொடர்பாக கலந்துரையாடி இருக்கின்றோம். இந்தத் தேர்தல் நாட்டின் முக்கியமான தேர்தலாகும் இந்த தேர்தலை நாம் எப்படி நடத்தி முடிப்பது என்பது தொடர்பில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கின்றது.
நாடாளுமன்ற தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட்டால் அதற்குரிய மாற்று நடவடிக்கை என்ன அது குறித்து சட்டத்தில் இதுவரையில் எத்தகைய வியாக்கியானம் காணப்படாமையினால் புதிய வியாக்கியானங்களை உள்ளடக்கிய சட்டத்திருத்தம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதனை எவ்வாறு செய்வது என்பது குறித்தும் நாங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாட இருக்கின்றோம்.
தேர்தலை இரண்டு மூன்று கட்டங்களாக நடத்துவதற்குரிய வியாக்கியானம் எதுவும் அரசியலமைப்பில் காணப்படவில்லை என்றாலும் கூட ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட திகதிகளை அறிவித்திருந்தால் அதனை கவனத்தில் எடுத்து செயல்பட்டிருக்க முடியும்.
ஆனால் அவர் ஒரே திகதியை தான் அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில் திகதிகளில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் அது குறித்து ஜனாதிபதி உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோர வேண்டும். அல்லது பாராளுமன்றத்தை கூட்டி சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதற்குரிய அதிகாரம் ஜனாதிபதியே சார்ந்திருக்கின்றது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எவ்வளவு காலத்துக்கு செல்லுபடியாகும் என்று அவரிடம் கேட்டபோது அப்படியொரு வியாக்கியானமும் யாப்பில் கிடையாது.
நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி ஜூன் மாதம் 2 ஆம் தேதியுடன் காலாவதி ஆவதால் அடுத்தகட்டமாக நாங்கள் உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாட வேண்டியுள்ளது என்றாலும் ஒரு வேட்புமனுவும் ரத்து செய்யப்பட முடியாது. அப்படி செய்ய வேண்டுமாக இருந்தால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இப்பொழுது ஊரடங்குச் சட்டமானது அவசரகால விதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் அல்ல இதில் மாவட்ட மட்டத்திலான பொலிஸ் ஊரடங்கு சட்டம் ஆகும். அதையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.
இன்றைய நிலையில் அரசாங்கமோ வேறு தரப்புகளோ தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்பினாள் அது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் நாட்டில் கொரோனா தோற்று முற்றுமுழுதாக முடிவுக்கு வரவில்லை இந்த நிலையில் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அது பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
தென்கொரியாவில் தேர்தலை நடத்தியது பற்றி பலரும் சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள். ஆனால் அங்கு தேர்தல் நடத்தப் பட்ட பின்னரும் கூட 95 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
இந்த தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஏற்படக்கூடிய செலவினங்கள் பற்றி முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் நாட்டின் பொருளாதாரம் ஒரு அளவுக்கு முடங்கிப் போயுள்ளது இந்த நிலையில் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட 750 கோடி ரூபாய் மூன்று மடங்காக அதிகரிக்கும் நிலையே காணப்படுகின்றது.
வாக்களிப்பு நிலையங்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் தொற்று நோய் கிரிமிநாசி தெளித்து நீக்க வேண்டும். அதிகாரிகளுக்கு அதற்குரிய சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
வாக்காளர்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயப்படுத்தப்படும். அதிகாரிகளுக்கும் அப்படியே… இவ்வளவுக்கும் மத்தியிலும் தேர்தலை நடத்துவதாக இருந்தால் செலவினம் மூன்று மடங்காக அதிகரிக்கும் எப்படியும் 2500 கோடி ரூபாயை தாண்டும் என்று நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இது எந்த வகையில் சாத்தியப்படும் என்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
தேர்தல் செயலகம் உரிய தேர்தல் திகதியொன்றை ஜனாதிபதி அறிவித்தால் அதற்குரிய சாத்தியக்கூறுகள் உச்ச நீதிமன்றத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தபட்டால். தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பெறாமல் திடுதிப்பென்று தேர்தலை நடத்துவது சாத்தியமான ஒன்றல்ல. அடுத்த கட்டமாக தேர்தல் நடத்துவதற்கு ஒரு திகதி நிர்ணயிக்கப்படும் போது முடிந்த அளவு நான்கு அல்லது ஐந்து வாரங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
வேட்பாளர்கள் கட்சிகள் தங்கள் பிரசார பணிகளை முன்னெடுப்பதற்கு தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
நாங்கள் இன்றைய கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தெளிவு படுத்துவோம் அவர்களுடன் எட்டப்படக் கூடிய ஆலோசனைகள் அறிவுறுத்தல்களை பெற்றுக் கொண்டு அதனை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து அவரது முடிவை கோருவோம். அதன் பின்னரே எமது செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதை எம்மால் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்க்கட்சிகள் பலவும் தற்போதைய நிலையில் தேர்தலை நடத்த முனையக் கூடாது. என்று பல தடவைகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்ன காரணத்துக்காக என்பதை நாங்கள் தெளிவாகவே விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது ஒருவகையில் எதிர்க்கட்சித் தரப்பினர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக மட்டுமே இருக்கக் கூடியதாக இருக்கும் அவர்களுக்கு அமைச்சுப்பதவிகளோ வேற எந்த பதவிகளோ கிட்டப் போவதில்லை.
அதற்காக அவசரப்பட தேர்தலை நடத்தி நாங்கள் சிக்கலில் மாட்ட தேவையில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். மற்றொரு வகையில் அரசாங்கம் தேர்தலில் எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலை அவசரப்பட்டு நடத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
1கோடி 63 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருப்பதோடு அங்கு ஏற்படக்கூடிய சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது முன்னர் போன்று இந்த காலகட்டத்தில் தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஒவ்வொரு வாக்காளருக்கும் சுகாதார ரீதியில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியுள்ளது. இதனை கவனத்தில் கொள்ளும்போது தேர்தலை குறுகிய காலத்துக்குள் நடத்துவது என்பது சாத்தியப்பட கூடியதாக காணப்படவில்லை.
என்றாலும் கூட உயர் மட்டங்கள் எடுக்கும் முடிவிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியிரக்கின்றது என்ற ஒரு நிலையும் காணப்படுகின்றது தேர்தல் குறித்து அடுத்து வரக்கூடிய அறிவித்தல்களிளேயே அனைத்தும் தங்கியிருக்கின்றது. சந்திப்புகள் காத்திரமானதாக அமைய வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புகின்றனர்.
Tamilmirror