கொரோனா வைரஸ்: இலங்கையில் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை கூட்டுமாறு, எதிர்க்கட்சிகள் கூட்டாக கோரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறத்து ஆராய்வதற்காக கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கையெழுத்துடன் இந்த கூட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் – 19 வைரஸை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் இலங்கை புதிய பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தலாம் என சில நாட்களுக்கு முன்னர் நம்பியிருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக தற்போது அந்த நம்பிக்கை தளர்ந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் கொவிட் தொற்று காரணமாக நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தங்களது பாதுகாப்பை பொருட்படுத்தாது அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பு, அரசியல் தீர்மானங்களினால் வீணாகி போகக்கூடாது என அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழல் ஏற்பட சாத்தியம் கிடையாது என நியாயமாக தீர்மானிக்க முடியும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், அண்மித்த காலத்தில் தேர்தல் ஒன்றை நடத்தி, மக்களை தேவையற்ற சுகாதார இடர் ஒன்றிற்குள் தள்ளக்கூடாது என கூறியுள்ள 7 கூட்டு கட்சிகள், கடந்த வாரத்தில் வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏனைய நாடுகளை போலவே எமது நாடும் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை என்ற தனித்துவமான மூன்று அதிகாரங்களை கொண்ட நிறுவனங்களால் ஆளப்படுகின்றது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தை நிலைநாட்டுவதற்கு இந்த மூன்று துறைகளும் இன்றியமையாதது என 7 கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

இதற்கு முன்னர் சந்திக்காத சவாலொன்றை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில், குறித்த மூன்று துறைகளினதும் செயற்பாடுகள் ஏனைய சந்தர்ப்பங்களை விடவும் தற்போது அத்தியாவசியமானவை என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி அரசியலமைப்பின் 70(7) உறுப்புரிமையின் பிரகாரம், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை அவர் எடுக்க மறுக்கின்றார் எனவும் அந்த கூட்டு கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்படும் சூழலில் நாடாளுமன்றம் நீண்ட காலத்திற்கு செயலிழந்திருப்பது மிகவும் அபாயமானது என அந்த கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டி, கட்சிகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வது சிறந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் பொது சுகாதார சிக்கலுக்கு தேவையான புதிய சட்டங்களை இயற்றுவதும், பொது நிதியிலிருந்து பணம் எடுப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறுவதும் முக்கியமானதும், அவசர கடமையானதும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் ஆட்சியானது முறையாகவும், சட்டபூர்வமாகவும், அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என கூறியுள்ள அவர்கள், அவ்வாறான ஆட்சி அமையுமாக இருந்தால் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காலத்தில் தமக்கான சம்பளம் வேண்டாம் எனவும், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம் எனவும், அரசாங்கத்தின் சட்டபூர்வமான செயற்பாடுகளுக்கு தடங்கல் விதிக்க மாட்டோம் எனவும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நிலையில், ஜுன் மாதம் 20ஆம் தேதி தேர்தலை நடத்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தேர்தலை நடத்துவதற்கான உகந்த நேரம் கிடையாது என கூறியுள்ள எதிர்க்கட்சிகள், வைரஸ் தாக்கம் நிறைவடைந்து நாடு வழமைக்கு திரும்பியதன் பின்னர் தேர்தலை நடத்த ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன், கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டி, அரசியலமைப்பின் பிரகாரம் சரியான தீர்மானங்களை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BBC