AMK: பாக்காத்தானில் மீண்டும் ஒன்றிணைவதற்கான பெர்சத்துவின் யோசனை ஏற்புடையது அல்ல

பக்காத்தான் ஹராப்பான், ஜோகூரின் பெர்சத்துவை மீண்டும் ஏற்க தயாராக உள்ளது என்று அமானா துணைத் தலைவர் சலாஹுதீன் அயூப் கூறிய அறிக்கையை பி.கே.ஆர். இளைஞர் குழு (ஏ.எம்.கே.) கண்டித்துள்ளது.

பெர்சத்துவை மீண்டும் பாக்காத்தான் ஹராப்பான் உறுப்பினராக இணைக்க வேண்டும் என்ற கருத்தை ஏ.எம்.கே. உறுதியாக நிராகரிக்கிறது என்று ஏ.எம்.கே. செயலாளர் அகமட் சுக்ரி பின் சே ஆப் ரசாப் கூறினார்.

“பெர்சத்துவை மீண்டும் பாக்காத்தானுக்கு கொண்டுவருவதற்கான எந்தவொரு யோசனையும் நியாயமற்றது என்று ஏ.எம்.கே. கருதுகிறது, மேலும் இந்த யோசனையை பாக்காத்தான் உச்ச கவுன்சில் நிராகரிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பெர்சத்துவுடன் அரசாங்கத்தில் இணைய விரும்பும் பாக்காத்தான் தலைவர்களை கட்சியை விட்டு வெளியேறுமாறும் அகமட் சுக்ரி கேட்டுக்கொண்டார்.

“மத்திய அல்லது மாநில அளவில் பெர்சத்துவுடன் இணைந்து அரசாங்கத்தில் சேர வேண்டும் என்று கனவு காணும் தலைவர்கள் யாரும் பாக்காத்தானில் இருந்தால், அவர்கள் பாக்காத்தானை விட்டு விலகி பெர்சத்து, அம்னோ, பாஸ் அல்லது அஸ்மின் அலி குழுக்களுக்கு கட்சி தாவிச் செல்லலாம்” என்று அவர் கூறினார்.

அரசாங்க நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் குறித்து அதிருப்தியைத் தொடர்ந்து ஜொகூரில் அம்னோவிற்கும் பெர்சத்துவுக்கும் இடையிலான விவாதங்களுக்கு மத்தியில் சலாவுதீன் நேற்று இந்த அறிக்கையை வெளியிட்டார்.

இருப்பினும், சலாவுதீனின் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அது பாக்காத்தானை பிரதிநிதிக்கவில்லை என்றும் அகமட் சுக்ரி கூறினார்.

“கடந்த பொதுத் தேர்தலில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு வீழ்ச்சியை ஏற்படுத்திய சில தனிநபர்களின் துரோகத்தை மறக்க முடியாது. பாக்காத்தான் ஆதரவாளர்களின் விரக்திக்கும் உணர்வுக்கும் சலாஹுதீனின் இந்த கூற்று மதிப்பளிப்பாதாக தெரியவில்லை என்று AMK கருதுகிறது” என்றார்.

“முகமது அஸ்மின் அலி மற்றும் அவரது கும்பலால் தூண்டப்பட்ட துரோகச் செயலில் இணைந்து செயல்பட, பெர்சத்து, பாக்காத்தானை விட்டு வெளியேற தேர்வு செய்தது.

“எனவே பெர்சத்து அணியை மீண்டும் ஏற்று கொள்ள சலாவுதீன் எளிதில் ஒரு அறிக்கையை வெளியிடுவது நியாயமற்றது” என்று அவர் கூறினார்.

வலுவான எதிர்க்கட்சியாக மாறுவதில் பாக்காத்தான் கவனம் செலுத்தி, மீண்டும் மலேசியாவின் ஆட்சியாளராவதை உறுதிசெய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று அகமட் சுக்ரி கூறினார். கட்சி அல்லது ஆளும் கட்சியிடமிருந்து எந்தவொரு துரோகச்செயல் அல்லது நாசவேலை செய்யப்படும் அபாயம் இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.