இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள பின்னணியில், தொழில்சார் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை இன்று (மே 11) முதல் வழங்கவுள்ளதாக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.இதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்களை வெளியில் செல்ல அனுமதிக்க புதிய நடைமுறை ஒன்றை இன்று முதல் அமல்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையிலுள்ள இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டையில் இறுதி இலக்கம் 1 அல்லது 2ஆக காணப்படுமாயின், அவர்களுக்கு திங்கட்கிழமையும், 3 அல்லது 4ஆக காணப்படுமாயின் அவர்களுக்கு செவ்வாய்க்கிழமையும் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும்.
அதேபோன்று 5 அல்லது 6 என்ற இறுதி இலக்கங்களை கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு புதன்கிழமையும், 7 அல்லது 8 என்ற இறுதி இலக்கங்களை கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு வியாழக்கிழமையும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.9 அல்லது 0 இலக்கங்களை இறுதியாகக் கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு வெள்ளிக்கிழமை மாத்திரமே வெளியில் செல்ல முடியும்.
dinamalar