பொதுத் தேர்தல் தொடர்பில், தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையே நேற்றைய தினம் (12) பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், ஜூன் 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்துவது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில், பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்ற போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதித் திகதியை அறிவிக்குமாறு, தேசிய தேர்தல் ஆணைக்குழுவிடம், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், கொவிட் 19 தொற்றுப்பரவல் மற்றும் தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் என்பன, அவ்வாறு திகதியைத் தீர்மானிப்பதற்குச் சவாலாக அமைந்திருந்தன.
இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பின் முடிவுக்ககாகத் தேசிய தேர்தல் ஆணைக்குழு காத்திருப்பதாகத் தெரிவித்த ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தலுக்கு 35 நாள்களுக்கு முன்னதாகவே திகதி தீர்மானிக்கப்பட வேண்டும் எனச் சட்டம் இறுக்கமாகச் சொல்லவில்லை என்ற போதிலும், பிரசாரத் தேவைக்காகவே தாம் அதனைத் தீர்மானிப்பதாகக் கூறியுள்ளார்.
நேற்றைய பேச்சுவார்த்தையின் போது தொடர்ந்துரைத்துள்ள அவர், “எங்கள் முதலாவது அக்கறை பொதுமக்களாவர். இரண்டாவதாக, அரச உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளினதும் ஊழியர்களினதும் பாதுகாப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
“இந்தக் கலந்துரையாடலுக்னு 34 கட்சிகள் வந்திருந்த நிலையில், இன்று (13) 24 கட்சிகளுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கொரியாவில் தேர்தல் நடத்தியதைப் போன்று, இலங்கையில் தேர்தலை நடத்த முடியாது. ஜூன் மாதம் 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்துவதா அல்லது தள்ளிப்போடுவதா என, இப்போது அறிவிக்க முடியாது. ர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே, தேர்தல் குறித்த தீர்மானம் எடுக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்தக் கலந்துரையாடலின் போது, தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பு இலக்கங்களைத் தேர்தல் ஆணைக்குழு வழங்க வேண்டுமென ஆளுங்கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்த போது, அதற்கு எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மக்களிடம் பிரசாரம் செய்வது எப்படி?
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தால், சில விடயங்களைப் புதிய சட்டங்களை இயற்றியே நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமெனத் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, இதனைக் கருத்திற்கொண்டே தேர்தலை நடத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அரச, பொது நிர்வாகச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், விருப்பு எண்ணை வழங்கினால், அதனை எவ்வாறு மக்களுக்குப் பிரசாரம் செய்ய முடியும் எனவும் வினவியுள்ளார்.
மாறாக, முழுத் தேர்தல் நடவடிக்கைகளும் நிவாரணங்களை வழங்கும் செயற்பாடாகவே அமையுமெனவும் இதனை வெற்றிகரமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய அநுரகுமார, அந்த வாய்ப்பு எதிரணியினருக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.
பிற்போடுவதே சிறந்தது
மார்ச் 18ஆம் திகதியன்று, 68 கொரொனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 870ஐத் தாண்டியுள்ளதால், எதிர்வரும் நாள்கள் எப்படி அமையுமென உறுதியாகச் சொல்ல முடியாது எனக் கூறியுள்ள ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பொதுத் தேர்தலைப் பிற்போடுவதே சிறந்ததெனத் தெரிவித்துள்ளார்.
அரசியல் தேவைகளுக்காகவா?
நாடு வழமைக்குக் கொண்டுவரப்படுவது சுகாதாரத் துறையின் ஆலோசனைக்கு அமையவா அல்லது, அரசியல் தேவைகளுக்காகவா எனக் கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, அமைச்சின் செயலாளர்கள் கூட இராணுவ மயமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
TamilMirror