நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை

தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் அறிவிப்பு

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலைக்கு அமைய எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை கிடையாது என தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது.

உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளின் போது, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய மற்றும் அதன் உறுப்பினர் நலின் அபேசேகர ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இலங்கையில் தேர்தலை நடத்த முடியும் என சுகாதார பிரிவினர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் வரை தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

தேர்தலை நடத்த முடியும் என சுகாதார பிரிவினர் அறிவித்தல் விடுக்கும் சந்தர்ப்பம் முதல், தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் தேதியை சவாலுக்கு உட்படுத்தி மனுவொன்றை தாக்கல் செய்திருந்த சட்டத்தரணி ஷரித்த குணரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணி ஷரித்த குணரத்னவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் கிடைத்துள்ள நிலையிலேயே தான் இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், தேர்தல் வர்த்தமானி மற்றும் நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானி ஆகியவற்றிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகளை ஐந்து நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் விசாரணை செய்து வருகின்றது.

நாடாளுமன்றம் கலைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் இருக்கின்ற நிலையில், தேர்தலை நடத்தும் நோக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்ற கலைப்பு தொடர்பிலாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

இந்த வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் மாதமே நிறைவடைந்திருந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பின்னணியில், இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் மார்ச் 20ஆம் தேதி தீர்மானித்தது.

இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்த நிலையிலும், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்தமையினாலும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், மார்ச் மாதம் 20ஆம் தேதி தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், சுகாதார மற்றும் பாதுகாப்ப பிரிவினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, தேர்தலை ஜுன் மாதம் 20ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஜுன் 20ஆம் தேதியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது.

எவ்வாறாயினும், கொரோனா தொற்று பிரச்சினை நாட்டில் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படாத காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, தேர்தல் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வந்திருந்தனர்.

இந்த நிலையிலேயே உயர்நீதிமன்றத்தில் தேர்தலுக்கு எதிராக பல அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை ஐந்து பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BBC