‘ஓப் பெந்தேங்’ தீவிரம்

நோன்பு பெருநாளைக் கொண்டாட தங்கள் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள வெளிநாட்டினர் மலேசியாவுக்கு திரும்ப மாட்டார்கள் என்பதை உறுதி செய்வதற்காக, நாட்டின் அனைத்து எல்லைகளிலும் ‘ஓப் பெந்தேங்’-கை அரசாங்கம் தீவிரப்படுத்தும்.

கோவிட்-19 இறக்குமதி பாதிப்புகள் பரவுவதைத் தடுக்க, நாட்டினுள் நுழையும் ‘எலி பொந்துகளில்’ அதிகாரிகளின் கண்காணிப்பு மேம்படுத்தப்படும் என்றார் மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்.

“எடுத்துக்காட்டாக, இங்கு வேலை செய்ய அனுமதி பெற்ற இந்தோனேசிய குடிமக்கள் தங்கள் நாட்டில் நொன்பு பெருநாள் விடுமுறையை முடித்து மீண்டும் மலேசியா திரும்பும் போது, அவர்களை இந்த நாட்டிற்கு திரும்ப அனுமதிக்க மாட்டோம்.”

“நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது அவர்களை இங்கு திரும்ப அனுமதிக்காமல், இறக்குமதி வழக்குகளைத் தவிர்ப்பதே நமது கொள்கையாகும்” என்று அவர் கூறினார்.

கோவிட்-19 பாதிப்பைத் தடுக்கும் நோக்கில், மலேசிய ஆயுதப்படை, மலேசிய காவல்துறை, மலேசிய கடல்சார் அமலாக்க துறை மற்றும் மலேசிய எல்லை பாதுகாப்பு துறை ஆகியவை, எல்லைகளை கடக்கும் குற்றங்களைத் தடுக்கவும், தேசிய எல்லைகளை PATI-யிடமிருந்து பாதுகாக்கவும் நாட்டின் எல்லைகளை ‘ஓப் பெந்தோங்’ மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.