நஜிப் வழக்கு: கோலாலும்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் கடும் காவல்

கோலாலும்பூர் உயர்நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டு முக்கிய நுழைவாயில்கள் உட்பட கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி காவல்துறையினர் கட்டுப்பாட்டை கடுமையாக்கியுள்ளனர்.

எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிதியில் RM42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நஜிப் ரசாக் வழக்கின் முடிவுகளை இன்று அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த பல காவல்துறை அதிகாரிகள் வளாகத்தை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 தொற்றுநோய் பரவாமல் தடுக்க இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்கவும், முகக்கவரிகளை அணியவும் நீதிமன்ற வேலிக்கு வெளியே இருக்கும் நபர்களுக்கு அறிவிக்க காவல்துறையினர் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தினர்.

பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான நஜீப்பின் சுமார் 1,000 ஆதரவாளர்கள், கோலாலம்பூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் முற்றத்தில் இன்று காலை 5.45 மணி முதல் கூடினர்.

பெக்கான் மற்றும் சினி உள்ளிட்ட இடங்களில் இருந்து நஜிப்பின் ஆதரவாளர்களை ஏற்றி வர 20 பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

சிறப்பு பாஸ்கள் கொண்ட சில ஊடகக்காரர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களின் எண்ணிக்கை கோவிட்-19 SOP-க்கு ஏற்ப வரையறுக்கப்பட்டுள்ளது.

காலை 10.30 மணி நிலவரப்படி, எந்தவிதமான சலசலப்பும், தேவையற்ற சம்பவங்களும் இன்றி நிலைமை கட்டுக்குள் இருந்தது.