இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு, இந்திய அரசாங்கம் வசம் உள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
அப்போது, புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இல்லாது செய்யும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக இந்தியாவின் உதவியுடன் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தை ஒருபோதும் இல்லாது செய்ய இடமளிக்க போவதில்லை என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டிற்கு ஏற்புடையதல்லாத விடயங்களை தற்போதைய அரசாங்கம் செய்ய முயற்சிக்கும் பட்சத்தில், அதற்கு எதிராக சர்வதேசம் வரை சென்று நீதியை நிலைநாட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் மனோ கணேஷன் தெரிவிக்கின்றார்.
கேள்வி :- கடந்த நாடாளுமன்ற தேர்தல், ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று ஆட்சி அமைத்திருக்கின்றது. இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் :- இல்லை. அது சிங்கள மக்களின், பெரும்பான்மை மக்களின் மன விருப்ப வாக்குகளாக வெளிப்பட்டிருக்கிறது. மறுபுறத்திலே எங்களது கூட்டணியை பொருத்த வரையிலே 6 உறுப்பினர்கள் 8 ஆவது நாடாளுமன்றத்தில் இருந்தோம். அதே 6 பேர் இருக்கின்றோம். ஆகவே எங்களது வளர்ச்சி சிறப்பாகத்தான் இருக்கின்றது. ஆகவே தான் எதையும் எதிர்கொள்வோம்.
கேள்வி :- பெரும்பான்மை மக்கள் ஒன்றிணைந்தும், சிறுபான்மை மக்கள் பிரிந்தும்வாக்களித்ததுதானா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுவதற்கு காரணம்?
பதில் :- அப்படிதானே தெரிகின்றது. ஆனால் இது முதல் முறை அல்லவே. 2010ஆம் வருடங்களில் கூட அப்படி தான் நடந்தது. 2015ஆம் வருடத்தில் நாங்கள் வென்ற போது கூட பெரும்பான்மையான, பெரும்பான்மை இனத்தவர்கள், வாக்களித்தது மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தான். ஆகவே அதில் ஒரு சிறுபான்மையும், பெரும்பான்மையும் சேர்ந்து தான் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை நாம் உருவாக்கினோம். அந்த கணக்கீடு இருக்கத் தான் செய்கிறது. இது மாற்றப்பட வேண்டும்.
கேள்வி :- தமிழ் கட்சிகளின் வாக்கு வங்கியில் கூட சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் :- தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படவில்லை. அது அப்படியே தான் இருக்கின்றது. எம்.பிகளின் எண்ணிக்கை அப்படியே தான் இருக்கின்றது. அது தவிர, பெற்ற வாக்குகளிலே சரிவு என்றால், பெற்ற வாக்குகளின் விகிதம் குறைவடைந்துள்ளது. எல்லோருக்கும் பொதுவானது அது. அதுதவிர எங்களது எண்ணிக்கை அவ்வாறே இருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கிலே மற்றும் ஏனைய இடங்களை பார்க்கும் போது, தமிழ் கட்சிகளின் வாக்குகளிலே சரிவு ஏற்பட்டிருக்கின்றது. அந்த சரிவு என்பது அவர்கள் பெற்ற எம்.பிகளின் தொகையிலும் பிரதிபலிக்கின்றது. அது கவலைக்குரியது தான்.
கேள்வி :- வடக்கில் இந்த முறை பெரும்பான்மை கட்சிக்கு ஆதரவு வழங்கிய இரண்டு கட்சிகள் பெரும்பான்மையான வாக்குகளால் வெற்றியீட்டி இருக்கின்றன. அப்படியென்றால், உங்களது ஆட்சியில் ஏதாவது தவறிழைக்கப்பட்டிருக்கின்றதா?
பதில் :- இந்த கேள்வியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே கேட்டிருக்க வேண்டும், என்னிடம் அல்ல. அவர்கள் தான் அங்கே வாக்குகளை பெற்று, வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவம் செய்தார்கள். இந்த கேள்விக்கு பதில் கூற வேண்டியவர்கள் அவர்கள் தான், நான் அல்ல. எங்களது ஆட்சியை பொருத்தவரை, நாங்கள் பல விடயங்களில் முன்னடைவை செய்துள்ளோம். சிலவற்றில் பின்னடைவாகியுள்ளோம். ஆனால், பல திருப்திகரமான விடயங்களை செய்து முடித்துள்ளோம். ஜனநாயகம், சுதந்திரம், ஊடக சுதந்திரம், மேலும் காணாமல் போனோர் தொடர்பாக, காணிகள் விடுவிப்பு தொடர்பாக, அரசியல் கைதிகள் தொடர்பாக பல முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டன. அரசியல் கைதிகள் 200 பேர் இருந்தார்கள், நாம் ஆட்சிக்கு வரும் போது, அது 100 பேர் வரை குறைந்திருக்கின்றது. நாங்கள் எங்களது அரசாங்கத்தின் மூலமாக சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு வழங்கிய அறிவுறுத்தல்கள் மூலமாக பலருக்கு பிணை கிடைத்தது. பலர் புனர்வாழ்வு சென்றார்கள். பலர் விடுதலை செய்யப்பட்டார்கள். காணி விடுவிப்பில் கூட, கணிசமான அளவு காணி 50 அல்லது 25 வீதமான காணி விடுவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் பிரச்சனை தொடர்பாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைத்தோம். காணாமல் போனோரை கண்டு பிடித்ததாக சொல்ல வரவில்லை. புதிதாக காணாமல் போகும் நிகழ்வு நிறுத்தப்பட்டது. காணாமல் போதல் என்பது காணாமல் போனோரை கண்டு பிடிப்பது என்பது ஒன்று, புதிதாக காணாமல் போகின்றவர்களை, அந்த பாவத்தை செய்யப்படாமல் நிறுத்துவது. எங்கள் ஆட்சியிலே எவரும் காணாமல் போகவில்லை. யாரும் தேவையில்லாமல் கைது செய்யப்படவில்லை. காணிகள் பலவந்தமாக பிடிக்கப்படவில்லை. அது எல்லாம் முன்னேற்றகரமான சம்பவங்கள். அதை எல்லாம் யோசித்து பார்க்க வேண்டும்.
கேள்வி :- குறிப்பாக நீங்கள் கூறுவதை போன்று, கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தான் காணாமல் போனோர், கடத்தல் விவகாரங்கள் இருந்தன. நீங்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்த ஒருவர். அப்படியென்றால், இது சர்வதேச அளவில் பேசப்பட்ட ஒரு விடயம். ஐநா வரை பேசப்பட்டது. இனி அவர்களே ஆட்சி அமைத்து விட்டார்கள். இனி இந்த விடயம் எவ்வாறு முன்னெடுக்கப்படும்?
பதில் :- பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். உண்மையிலேயே அவர் வந்தவுடன் செய்த காரியம் என்னவென்றால், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிலே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, பங்குதாரியாக இருந்த நிலைப்பாட்டை அவர்கள் வாபஸ் பெற்றுவிட்டார்கள். ஆகவே அதை ஐநா எப்படி பார்க்க போகின்றது என்று பார்க்க வேண்டும். இதுவரை இருந்தது இடைகால அரசாங்கம். இனிமேல் தான் நிரந்தர அரசாங்கம் வரபோகிறது. ஐ.நா தீர்மானம் பின்வாங்கப்பட்டாலும் கூட, அந்த தீர்மானத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள், எங்கள் சார்பானவை. நியாயம் சார்பானவை, நீதி சார்பானவை. அவற்றை நிச்சயமாக முன்னெடுப்பதற்கான எங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் பாராளுமன்ற வரம்புக்குள் இருந்து செய்வோம்.
கேள்வி : மனோ கணேஷன், காணாமல் போனோர் விவகாரம், கடத்தப்பட்டோர் விவகாரம் ஆகியவற்றிற்கு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராகவே குரல் கொடுத்த ஒருவர். தற்போது கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கின்றது. தற்போது மனோ கணேஷனின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்?
பதில் :- பொறுத்து இருந்து பாருங்களேன். கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ என்றாலும், ராஜபக்ஷ அரசாங்கம் தான். ராஜபக்ஷ அரசாங்கத்தில் கோட்டாபயவா மஹிந்தவா என்று பிரச்சனை இல்லை. இந்த நாட்டிலே வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு முஸ்லிம் மக்களுக்கு, சிங்கள மக்களுக்கும் கூட அந்த அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்கின்றதா? மனித உரிமை நியமங்களை மதிக்கின்றதா? என்பது தான் தொக்கி நிற்கும் விடயம். அதை நாங்கள் கண்காணிப்போம். அவ்வளவு தான்.
கேள்வி:- ராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்வதாக பலரும் அச்சப்படுகிறார்களே, அதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் :- அந்த அச்சத்தை நானும் பகிர்ந்துகொள்கின்றேன். அவ்வாறு தான் இருக்கின்றது. இந்த அரசாங்கம், ஜனாதிபதி பதவிக்கு வந்தவுடனேயே அவர் பல முக்கிய பதவிகளுக்கு இராணுவ ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்திருக்கின்றார். பாராளுமன்றத்தில் கூட பல ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கின்றார்கள். ஆகவே இதையெல்லாம்; பார்க்கும் போது அச்சம் ஏற்படுவது இயல்வு தானே. கடந்த ராஜபக்ஷ ஆட்சியின் வரலாற்றை எடுத்து பார்க்கும் போது, அந்த அச்சம் மேலும் வலுப்படுகின்றது. அது நியாயமானது தான். நியாயமான அச்சம்.
கேள்வி :- இந்த ஆட்சி அமைந்தவுடனேயே ஒரு கருத்து வெளிவந்தது. உங்கள் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 19ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்பட போகின்றது என்று. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் :- அதை அவர்கள் மீண்டும் மீண்டும் பகிரங்கமாக சொல்லி கொண்டு தான் இருக்கின்றார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. 19ஆவது திருத்தம் என்பது நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டது என்றாலும், அது நல்லாட்சியின் பங்காளிகளுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. பாராளுமன்றத்திற்கு வெளியில் இருக்கக்கூடிய சிவில் சமூகம், நாடு முழுவதும் இருக்கின்றது. அந்த சிவில் சமூகத்தின் பல்வேறு பாரிய போராட்டங்களுக்கு மத்தியிலும், எங்களது அரசியல் கட்சிகளின் போராட்டங்களும் சேர்ந்து தான் படிப்படியாக இந்த 19ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்மூலமாக நாட்டிலே ஜனநாயகம் நிறுவப்பட்டிருக்கின்றது. ஜனநாயகத்திற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கின்றது. 19ஆவது திருத்தத்தின் ஒவ்வொரு விடயங்களை பார்த்தால், அதனூடாக ஜனநாயகம் இந்த நாட்டிலே வலுப் பெற்றிருக்கின்றது. சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மக்களாட்சி தத்துவம் ஒளிர்கின்றது என்று சொல்ல வேண்டும். அந்த நிலைமை இருக்கின்றது. அதை அகற்றுவதற்கு நாங்கள் இடம்கொடுக்க முடியாது. அரசியலமைப்பில் இருக்கின்ற சட்டங்கள் விதிகள் எதையுமே திருத்தலாம். அதில் பிரச்சினை இல்லை. 19 முறை திருத்தப்பட்டிருக்கின்றது அல்லவா. திருத்தலாம். பிரச்சினை இல்லை. திருத்துவது என்பது இருந்த நிலையை விட முன்னோக்கி நகர்வதாக இருக்க வேண்டும். பின்னோக்கி கொண்டு செல்ல முடியாது. 18ஆவது திருத்தத்தை இவர்கள் வைத்திருந்தார்கள். அதை மாற்றியே 19 ஐ கொண்டு வந்திருக்கின்றோம். மீண்டும் 18ற்கு செல்ல இடம்கொடுக்க முடியாது.
கேள்வி :- அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம், தமிழர்களுக்கு முக்கியமானதொரு திருத்தம். அதிகாரங்கள் பல இருக்கின்ற திருத்தம். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு பெருமளவில் இருந்தது. தற்போது புதிய அரசாங்கத்தினால் அதுவும் நீக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. இதற்கு உங்களின் எதிர்ப்பு அல்லது உங்களின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையும்?
பதில் :- 19 என்பதை விட அதிகமான அக்கறை எமக்கு 13ன் மேல் இருக்கின்றது. நாட்டிலே நீண்டகாலமாக நிலவி வருகின்ற, இன்னும் இருக்கின்ற, பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காத, தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக அன்றைய பாரத பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெனவர்தன இருவர் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக அந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்ட திருத்தம் தான் 13ஆவது திருத்தம். அதனாலேயே மாகாண சபை உரிமைகள் வந்திருக்கின்றது. மாகாண சபை முறைமையை தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு என சொல்லவரவில்லை. அது மாத்திரமல்ல, 13ஆவது திருத்தத்திலுள்ள சட்ட விதிகள் இன்று முழுமையாக அமுல்படுத்தப்படவும் இல்லை. இருந்தாலும் கூட சொல்வதற்கு எடுத்து காட்டுவதற்கு இருக்கும் ஒரேயொரு சட்ட விதி அது தான் இலங்கை அரசியலமைப்புக்குள்ளே. ஆகவே அதை அகற்ற விட மாட்டோம். இந்த அரசாங்கத்தின் கடப்பாடு மட்டுமல்ல, இந்திய அரசாங்கத்தின் கடப்பாடும் அதற்கு இருக்கின்றது. அது காங்கிரஸ் அரசா, ராஜீவ் அரசா, பாரதீய ஜனதா அரசா அல்லது மோடி அரசா என்பது அல்ல. இந்திய அரசாங்கத்தின் கடப்பாடு இருக்கின்றது. இந்தியாவில் எந்த அரசாங்கம் மாறி மாறி வந்தாலும் கூட ஒவ்வொரு அரசாங்கமும், பிரதமரும், 13ஐ வலியுறுத்தி வந்திருக்கின்றது. அதில் ஏற்கனவே சில குளறுபடிகள் நிகழ்ந்து விட்டன. வடகிழக்கு இணைப்பு இல்லாது போய் விட்டது. இன்னும் பல விடயங்கள் நிகழ்ந்து விட்டன. இருந்தாலும், அதையெல்லாம் சகித்து கொண்டிருந்தாலும் கூட, இப்போது வடகிழக்கு இணைப்பை பற்றி எவரும் பெரிதாக கதைப்பதில்லை. இரண்டும் வெவ்வேறு மாகாண சபைகளாக இருக்கின்றன. அதில் பிரச்சினை இல்லை. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் விருப்பத்தை பெற வேண்டிய தேவை இருக்கின்றது. அந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டாலும் கூட முழுமையாக மாகாண சபையை நீர்த்து போக செய்ய முடியாது. அதற்கு கவனமாக இருக்கின்றோம். எச்சரிக்கையாக இருக்கின்றோம். அதற்கு இந்தியாவின் கடப்பாடு இருக்கின்றது என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
கேள்வி :-இந்த நடவடிக்கைக்கு இந்தியா அல்லது சர்வதேசத்தின் தலையீட்டை எவ்வாறு கோருவதற்கு நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில் :- பொறுத்திருந்து பார்ப்போம். எடுத்ததற்கு எல்லாம் சர்வதேசத்தின் தலையீடு தேவையில்லை எங்களுக்கு. ஆனால் வேறு வழியில்லை என்றால் நாட தான் வேண்டும். வேறு வழியில்லை. சர்வதேசத்தின் தலையீடு வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க போவது இந்த அரசாங்கத்தின் நடத்தை தான். பார்ப்போம். கோட்டாபய ராஜபக்ஷவின் நடத்தை, மஹிந்த ராஜபக்ஷவின் நடத்தை தான் எங்களது அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் அவ்வளவு தான்.
கேள்வி :- தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு காணப்படுகின்றது. அவர்கள் ஏதாவது ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், மிகவும் இலகுவாக நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அப்படியென்றால், நாட்டிற்கு பொருத்தம் அல்லாத ஏற்புடையது அல்லாத விடயங்களை அவர்கள் கொண்டு வந்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இல்லாது செய்வதற்கான வலு உங்களிடம் காணப்படுகின்றதா?
பதில் :- உங்களது கேள்வி விசித்திரமாக இருக்கின்றது. அப்படியென்றால், 150 பேர் ஒரு கட்சி, ஒரு அரசாங்கத்தை பெற்றுவிட்டால், ஏனைய 75 பேரும் வீட்டிற்கு போவதா? இல்லையே, இருக்கத்தானே போகிறோம். எங்களது எதிர்ப்பை காண்பிப்போம். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லும் போது அதற்கு ஒரு வலு இருக்கிறது. தெருவிலே இருந்து ஆர்ப்பாட்டம் செய்யலாம். ஊர்வலம் செல்லலாம். கடையடைப்பு செய்யலாம். ஆகவே இந்த அரசாங்கத்திற்கு கேட்கும் வகையில், நாங்கள் எடுத்துக் கூறுவோம். ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்களுக்கு நாங்கள் எடுத்து கூறுவோம். கேட்காவிட்டால், முதல் கேள்வியில் தொக்கி நிற்கும் விடயம் அது தான். அரசாங்கத்திற்கு தாண்டி உலகத்திற்கு செல்வோம். ஐநா சபைக்கு செல்வோம். இந்தியாவிடம் செல்;வோம். அமெரிக்காவிடம் செல்வோம். செல்வதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டியது இவர்கள் தான். ஆகவே அடாவடியாக பாரிய பலம் இருக்கின்ற ஒரே காரணத்தினாலே அசுர பலம் இருக்கின்ற ஒரே காரணத்தினாலே அப்படி செய்ய முடியாது. இடம் கொடுக்க மாட்டோம். கடந்த கால வரலாற்றை எடுத்துக்கொண்டு பார்த்தால், 1956ஆம் வருடத்திலே இதே அணியினர் தான் வேறு பெயர்களில் செயற்பட்டனர். சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். என்ன நடந்தது கடைசியிலே. அப்போது கொல்வின் ஆர் டி சில்வா என்ற சொன்றார் ஒரு மொழி என்றால் இரண்டு நாடு. இரண்டு மொழி என்றால் ஒரு நாடு என்று சொன்னாரா இல்லையா?. அவரது அந்த கூற்றை தூக்கி எறிந்து விட்டு தான் இவர்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்த பிறகு அதற்கு தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் உங்களுக்கு தெரியும் தானே. யுத்தம் வரை சென்று தனிநாடு, இரண்டு நாடுகள் இருந்தன. சட்டபூர்வமாக இல்லாவிடினும் கூட வவுனியாவிற்கு மேலே வேறொரு நிர்வாகம் இருந்தது. பாரிய யுத்தம் நிகழ்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் மக்களும் இறந்தார்கள். முஸ்லிம் மக்களும் இறந்தார்கள். சிங்கள மக்களும் இறந்தார்கள். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். சொத்துக்கள் அழிந்தன. கலை கலாசாரம் அழிந்தன. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய நிதி ஒதுக்கீடுகள் எல்லாது பாலடிக்கப்பட்டது. பெரிய விலை கொடுத்திருக்கின்றோம். இன்னும் விலை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆகவே இதையெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஆகவே அன்று கொல்வின் ஆர் டி சில்வா சொன்னது,இன்று சரியாக இருக்கின்றது. அது மட்டும் அல்ல. அதற்கு முன்னாடி பாருங்கள். அதற்கு பிறகு பண்டா செல்வா ஒப்பந்தம் நிகழ்ந்தது. அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து பௌத்த பிக்குகள் சென்று ஆர்ப்பாட்டம் செய்து அதை கிழித்தெறிய வைத்தார்கள். கிழித்தெறிய வைத்த நேரத்திலே அதை கொண்டு வந்த தனி சிங்கள சட்டத்தை கொண்டு வந்து இனவாதத்தை கிளப்பி விட்ட அதே பண்டாரநாயக்க என்ன சொன்னார்? கிழித்தெறிகின்றேன். இது வரலாற்று தவறு. எதிர்காலத்தில் உணரப்படும் என்று சொல்லிட்டு தான் கிழித்தெறிந்தார். அவரே பௌத்த பிக்குவால் சுட்டு கொல்லப்பட்டார். இதெல்லாம் வரலாறு. இந்த வரலாறுக்கு திரும்ப கூடாது என்று விரும்புகின்றோம் நாங்கள்.
கேள்வி :- தற்போது சிறுபான்மை கட்சிகள் பிளவுப்பட்டு இருப்பதை காண முடிகின்றது. எதிர்காலத்தில் இவர்களை ஒன்றிணைந்துகொண்டு முன்னோக்கி செல்ல எவ்வாறான திட்டங்கள் காணப்படுகின்றன?
பதில் :- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த பாராளுமன்றத்திலே ஒரு பாரிய தவறை செய்து விட்டது. அது நன்றாக தெரியும். நான் சொல்வதற்கு உரிமை இருப்பதாக நினைக்கின்றேன். காரணம், நான் கடந்த பாராளுமன்றத்திலே உங்களுக்கு எல்லாம் தெரியும், ஊடகவியலாளர்களுக்கு நன்கு தெரியும். கேட்டுகொண்டிருக்கும் மக்களுக்கும் தெரியும். பல முறை நான் தமிழ் பாராளுமன்றம் உறுப்பினர்கள் ஒன்றிணைவோம் என்று சொன்னேன். ஒன்றியம் ஒன்றை அமைப்போம் என்று சொன்னேன். அரசியல் பேதங்களுக்கு அப்பால், பொது பிரச்சினைகளை பேசுவதற்கு. நான் அந்த நேரத்தில் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்றேன். இருந்தாலும் இறங்கி வந்தேன் நான். சொன்னேன். நாங்கள் தமிழ் பாராளுமன்ற ஒன்றியம் ஒன்றை அமைப்போம். அதற்கு பிறகு தமிழ் பேசும் எம்.பிகளை யும் இணைத்துகொள்ளலாம். முஸ்லிம்களையும் இணைத்துகொள்ளலாம் என்று சொன்னேன். அதற்கு அடுத்த கட்டமாக தமிழ் முஸ்லிம் மக்கள் மீது நியாயமான சிந்தனை கொண்ட சிங்கள முற்போக்காளர்களையும் சேர்;த்துகொள்வோம் என்று சொன்னேன்;. ஆனால் பல முறை அதை எடுத்துக் கூறியும், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கேட்பார்கள், நல்ல கருத்து தம்பி. செய்வோம் செய்வோம் என்று சொல்வார்கள். ஆனால், செய்ய மாட்டார்கள். அதை இழுத்துகொண்டே போனார்கள். ஏன் என்று தெரியவில்லை. அது வரலாற்று தவறு. 9ஆவது பாராளுமன்றத்திலாவது அப்படியானதொரு அமைப்பை உருவாக்க வேண்டும். அது சிங்கள மக்களுக்கு எதிரான நிறுவனம் அல்ல. தமிழ் மக்கள் ஒன்றாக சேர்வது என்பது சிங்கள முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல. தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக சேர்வது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றாக சேர்வது தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்ற தெளிவு இருக்க வேண்டும் எமக்கு. நாட்டை நேசிக்கும் நாங்கள். ஒரே நாட்டிற்குள்ளே என்னென்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கின்றது. அந்த நிறுவனத்திலே எனக்கு பிரதான பாத்திரம் தேவையில்லை. அதில் நான் தலைவராக வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. அந்த யோசனையை கருத்தில் எடுக்கும் படி இந்த நேரத்திலாவது 9ஆவது பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னாலே கூட்டமைப்பிடம் மட்டும் அல்ல, பல கட்சிகள் இருக்கின்றவே. எல்லாருக்கும் சொல்கின்றேன். ஆளும் கட்சி எதிர்கட்சியிலுள்ள எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து நாங்கள் பொது பிரச்சினைகளை அடையாளம் கண்டு குறைந்தபட்ச பொது வேலைத்திட்டமொன்றை அதை சமர்த்து தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.