கெரக்கான்: எம்ஏசிசி நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும்

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிரதமர் துறைக்குப் பதில் நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பரிந்துரையை கெராக்கான் ஆதரிக்கிறது.

ஊழல் மீதான சிறப்புக் குழு தெரிவித்துள்ள அந்தப் பரிந்துரை நியாயமானது என அந்தக் கட்சியின் உதவித் தலைவர் மா சியூ கியோங் கூறினார்.

காரணம் அரசாங்கத் துறையிலும் தனியார் துறையிலும் நிகழும் ஊழல்களை கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்காகவே எம்ஏசிசி அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

“எம்ஏசிசி சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்வதற்கு அது அரசாங்கத்திடமிருந்து பிரிக்கப்படுவது நியாயமான நடவடிக்கை ஆகும்.”

“அந்த ஆணையம் எந்த ஒரு துறையின் கீழும் வைக்கப்படக் கூடாது. எந்த ஒரு அரசாங்கத் துறையுடனும் இணைக்கப்படாமல் சொந்தமாக சுதந்திரமாக அது இயங்க வேண்டும் என மா விடுத்த அறிக்கை கூறியது.

“எம்ஏசிசி-யில் சுயநலன் சம்பந்தப்பட்டுள்ளதாக எழக் கூடிய எந்த ஐயமும் அந்த ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குரியதாக்கி விடும். அதன் விசாரணை முடிவுகளும் கூட கேள்விக்குரியதாகி விடும்,” என்றார் அவர்.

எம்ஏசிசி சுதந்திரமாகவும் திறமையாகவும் இயங்குவதை உறுதி செய்வதற்கு பொது மக்களுடைய எண்ணம் மிக முக்கியமானது என்றும் மா குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் எம்ஏசிசி முக்கியமான கருவி என்பதால் அதனுடைய சுதந்திரம் குறித்து அரசாங்கம் அணுக்கமாக ஆராய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

“எம்ஏசிசி சிறந்த முறையில் இயங்க முடியாவிட்டால், ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு விடும்.”

ஆகவே அந்த ஆணையத்தின் சுதந்திரத்தை உறுதி செய்ய அது அரசாங்கத்திடமிருந்து பிரிக்கப்படுவதே நியாயம் என அவர் மேலும் கூறினார்.