அநாகரிகமாக தாக்குவதை கண்டனம் செய்யுங்கள்  – அரசியல் கட்சிக்கு காமாட்சி வேண்டுகோள்

இராகவன் கருப்பையா- ஒரு முன்னோடி இந்திய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தமக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி மிகக் கேவலமாக வலைதளங்களில் காணொலி பதிவேற்றம் செய்துள்ளதாக ஜ.செ.க.வின் சபாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி துரைராஜூ போலீஸில் புகார் செய்துள்ளார்.

அண்மையில் தலைநகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றின் போது இது குறித்து விவரித்த அவர் இத்தகைய கீழ்த்தரமான செயல் ஒட்டுமொத்த இந்திய பெண்களையும் அவமானப்படுத்தும் ஒரு அசிங்கம் என்று குறிப்பிட்டார்.

மலேசிய அரசியல் வானில் இந்தியப் பெண்களின் பங்கு மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும். இத்தகைய சூழ்நிலையில், நீண்ட நாள்களாக சபாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் காமாச்சியும் பினேங்கில் உள்ள பத்து கவான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்  கஸ்தூரி ராணி பட்டுவும் மட்டுமே நம் சமூகத்தின் இரு சிங்கப்பெண்களாக முன்னிலை வகிக்கின்றனர்.

நம்மிடையே அதீத திறமையுள்ள நிறைய பெண்கள் வெளிவரமுடியாமல் இருப்பதற்கு இதுபோன்றவர்களின் மட்டமான செயல்கள்தான் காரணம் என்று குறிப்பிட்ட காமாச்சி, அவர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதுபோன்ற தரங்கெட்ட கும்பல்களின் அராஜக செயல்களினால் நம் இனப் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு, ‘பொருத்திருந்தால் தென்றல், புறப்பட்டால் புயல்’ எனும் தோரணையில் சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கிளம்பிவிட்டார் காமாச்சி.

காலம்காலமாய் கொச்சை வார்த்தைகளால் இந்தியப் பெண்களை இழிவுபடுத்தி காணொலிகளை பதிவேற்றம் செய்வது அவர்களுக்கு ஒரு கலாச்சாரமாகிவிட்டது என்ற அவருடைய ஆதங்கத்தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

தாய் கட்சி என்று சொந்தமாகவே கூறிக்கொள்ளும் அவர்கள் தாய்மார்களுக்கே மரியாதை கொடுக்காமல் இந்தியப் பெண்களின் பலதரப்பட்ட இன்னல்களுக்கு காரணமாக இருக்கிறார்கள் என்று காரசாரமாக விளாசும் காமாச்சியின் காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த பிரச்னை தொடர்பாக அந்தக்கட்சியின் தலைவருக்கு  அவர் அனுப்பியுள்ள மிகக் கடுமையான ஒரு கண்டன குரல் பதிவும் கூட இப்போது சமூக வலைதளங்களில் பெருமளவில் பரவியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கிட்டத்தட்ட ஒரு மறக்கப்பட்ட கட்சியாகவே அது இருந்தது. இந்நிலையில் இந்தியர்களின் ஆதரவு தற்போது தங்கள் பக்கம் மீண்டும் திரும்பியுள்ளது என நம்புகின்றனர்.

எனவே அரை நூற்றாண்டுக்கு முன் பிரபலமாக இருந்த இந்த கட்சி நமது சமூகத்தின் குறைந்த பட்ச மரியாதையையாவது சம்பாதிக்க அவர்கள் முற்பட வேண்டும்.

நம் இனப் பெண்களை மிகக் கேவலமாக கொச்சைப்படுத்தி இன்பம் காணத் துடிக்கும் மதி கெட்ட மட்டகரமான உறுப்பினர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை இக்கட்சி மேற்கொள்ளவில்லையென்றால் அத்தகைய நிலையை அடையும் கனவுகள் எல்லாமே வெறும் கானல் நீர்தான் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

ஆளும் கூட்டணியோடு சேர்ந்து ஆட்சிக்கு வந்துவிட்ட மமதையில் கட்சி உறுப்பினர்கள் நெறி தவறாமல் இருப்பதை உறுதி செய்வது தனது கடமை என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.

காலத்துக்கேற்ற கட்டொழுங்கு மிக்க ஒரு கட்சியாக உருமாற்றம் செய்யும் மாபெரும் பொறுப்பும் அவரிடம் உள்ளது.

‘இல்லை, நாங்கள் இப்படிதான்’ எனும் ஆணவத்தை முன்வைத்து பழைய மாதிரியே தான்தோன்றித்தனமாக அவர்கள் அரசியல் நடத்தினால் அடுத்த பொதுத் தேர்தலில் மற்றொரு பாடத்தை வாக்காளர்களிகடம் கற்றுக்கொள்ள அவர்கள் தயாராக வேண்டியிருக்கும் என்பது உறுதி.