வெங்காய விலை: இந்திய ஏற்றுமதி தடையால் பாகிஸ்தான், சீனாவை அணுகும் இலங்கை

இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கையில் பெருமளவில் காணப்படுவதாக வெங்காய மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் வெங்காய விவசாயம் முன்னெடுக்கப்படும் வேளையில், உள்நாட்டு தேவைக்கு வெங்காய உற்பத்தி போதுமானதாக இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக உள்நாட்டு தேவைக்கான பெருமளவிலான வெங்காயம், இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

இதேபோல, பாகிஸ்தான், வியட்நாம், இரான், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.

எனினும், இந்திய வெங்காயத்திற்கே இலங்கையில் பெருமளவிலான தேவை நிலவி வருகிறது.

இந்திய வெங்காயத்தின் விலை மற்ற நாட்டு வெங்காய ரகங்களுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்றாலும், அவற்றையே நுகர்வோர் அதிக அளவில் கொள்வனவு செய்து வருகின்றனர்.

அதற்கு காரணம், இந்திய ரக இறக்குமதி வெங்காயத்தின் சுவை அதிகம் என நுகர்வோர் கூறுகின்றனர்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தற்போது சந்தையில் காணப்படுகின்ற நிலையில், எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு வெங்காயத்தின் விலையில் பெருமளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு கிடையாது என வெங்காய மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர், சுமார் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு உள்நாட்டு உற்பத்தி சந்தைக்கு வரும் சந்தர்ப்பம் காணப்படுகின்ற பின்னணியில், வெங்காயத்தின் விலை ஓரளவு மாத்திரம் அதிகரிக்கும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதனைத் தொடர்ந்தே, வெங்காயத்தின் விலைகளில் பெருமளவு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாட்டு வெங்காயங்களுக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் வெங்காயத்திற்கு கேள்வி அதிகளவில் காணப்படுகின்றமையினால், பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழுக்கு இலங்கை 4ஆம் குறுக்கு தெருவிலுள்ள மொத்த வெங்காய விற்பனையாளரான கந்தையா சிவபாலன் கருத்து தெரிவித்தார்.

”வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. அதனால் இந்திய வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகின்றது. சுமார் 85 ரூபாவிற்கு இருந்த வெங்காயம் 180 ரூபா வரை அதிகரித்துள்ளது. இந்தியாவின் வெங்காயமே சிறந்தது. இலங்கை வெங்காயத்தின் விலை 170 ரூபாவாக இருக்கின்றது. அதுவும் நவம்பர் மாதம் வரை மாத்திரமே இருக்கும். அதற்கு பிறகு சீனா, ஈரான், எகிப்து போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். இந்திய வெங்காயத்திற்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் வெங்காயத்திற்கு வரவேற்பு உள்ளது,” என வெங்காய மொத்த விற்பனையாளர் கந்தையா சிவபாலன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான நிலையில், இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெங்காயத்தின் விலை இலங்கையில் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் அதிகரிக்கும் என்கிறார் சிவபாலன்

BBC