ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ஏன் விடுவிக்கப்பட்டார்? நாடாளுமன்றத்தில் சமல் ராஜபக்ஷ விளக்கம்

இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ

பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடி தொடர்புகள் இருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்காமையினாலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பரியூதீன் விடுவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும், எதிர்காலத்தில் மேலும் பலரை கைது செய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசாரணைகளின் ஊடாக ரியாஜ் பதியூதீனுக்கு பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புள்ளமை தொடர்பிலான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என சமல் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், தடுத்து வைத்து விசாரணை நடத்தும் உத்தரவை ரத்து செய்வதற்காக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் ரியாஜ் பதியூதீன் விடுவிக்கப்பட்டதாகவும் சமல் ராஜபக்ஷ கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த நபர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எந்தவிதத்திலும் நேரடியாக தொடர்புப்பட்டமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுத்தாரி, தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சுமார் 3 மாத காலத்திற்கு முன்னரே ரியாஜ் பதியூதீனுக்கு தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், தொழில் நிமிர்த்தமே இந்த தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரிஷப் பதியூதீன்

இந்த சம்பவம் தொடர்பில் பிரதி போலீஸ் மாஅதிபர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ரியாஜ் பதியூதீன் தொடர்புப்பட்டமைக்கான சாட்சியங்கள் இருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்ததாகவும், தற்போது அது மாறுப்பட்ட கருத்தாக காணப்படுகின்றது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சமல் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன், கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலை குண்டுத்தாரிகளுடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே ரியாஜ் பதியூதீன் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட்டுடன் தொலைபேசி ஊடாக தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் கீழ், ரியாஜ் பதியூதீன் கைது செய்யப்பட்டதாகவும் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தும் உத்தரவிற்கு அமைய, ஐந்து மாதங்களாக தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட ரியாஜ் பதியூதீன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

BBC