இலங்கை: மஹிந்த ராஜபக்ஷவின் 2ஆவது மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு அரசு பதவி

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது மகன், நமல் ராஜபக்ஷ, அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், தற்போது அவரது இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவும் அரசுப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ (71), நாட்டின் அதிபராக பதவி வகிக்கிறார். மூத்தவரான மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் பிரதமராக இருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ, நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று மகன்கள். மூத்தவரான நமல் ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவரது வரிசையில், இலங்கை கடற்படையில் அதிகாரி ஆக பணியாற்றி வந்த யோஷித ராஜபக்ஷ, பிரதமர் அலுவலகத்தில் ஊழியர் பிரிவு தலைமை அதிகாரியாக (இலங்கையில் பணியாளர் சபை பிரதானி என இப்பதவி அழைக்கப்படுகிறது) நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு ஏதுவாக தான் வகித்து வந்த இலங்கை கடற்படை அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் ராஜிநாமா செய்தார்.

சில தினங்களுக்கு முன்பு, யோஷித ராஜபக்ஷவின் புதிய நியமன அறிவிப்பு தொடர்பான தகவலை, இலங்கையில் உள்ள சீன தூதர் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதன் பிறகு, இலங்கையில் இந்த விவகாரம் விவாதத்துக்கு உள்ளானது. இலங்கை கடற்படை அதிகாரியாக இருக்கும் யோஷித, எவ்வாறு பிரதமர் அலுவலக பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார் என்று பரவலாக கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், இலங்கையில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இலங்கை கடற்படை பணியில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பிறகு தனது ராஜிநாமா கடிதத்தை சில மாதங்களுக்கு முன்பே அளித்திருந்ததாகவும் அது கடந்த 10ஆம் தேதி கடற்படை தலைமையகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் யோஷித ராஜபக்ஷ தெரிவித்தார்.

 யோஷித ராஜபக்ஷ

இதைத்தொடர்ந்து யோஷிதவின் புதிய பதவி நியமனத்துக்கு இலங்கை அமைச்சரவை கடந்த 12ஆம் தேதி ஒப்புதல் வழங்கியிருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதையடுத்தே தமது பதவியை ராஜிநாமா செய்து விட்டு அவரது அலுவலகத்தில் புதிய பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையில் 2006 முதல் 2020ஆம் ஆண்டுவரை பணியாற்றிய யோஷித ராஜபக்ஷ, யுக்ரேனில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் முதுகலை பட்டம் முடித்தவர்.

மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஆண்களும் அரசுப் பதவியில் உள்ள நிலையில், அவரது இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ மட்டும் இன்னும் அரசுப் பதவி ஏதும் வகிக்கவில்லை.

பைலட் மற்றும் முன்னாள் ரக்பி விளையாட்டு வீரரான ரோஹித, திருமணமாகி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிகளின்படி இரண்டு அலுவல்பூர்வ அரசு குடியிருப்புகள் உள்ளன. முன்னாள் அதிபர் என்ற முறையில் அவருக்கு விஜேராம பிரதேசத்தில் உள்ள ஒரு இல்லம், பிரதமர் பதவி வகித்து வருவதற்காக அலரி மாளிகையில் ஒரு இல்லம் உள்ளது.

இதில் அலரி மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மஹிந்த ராபஜக்ஷ, விஜேராம பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில், அலரி மாளிகையில் ரோஹித ராஜபக்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வசித்து வந்தனர். பிரதமர் அலரி மாளிகையில் தங்கியிருக்காத வேளையில், அவரது மகன் குடும்பத்துடன் அங்கு தங்கியிருப்பது சர்ச்சைக்கு வழிவகுக்கும் என கருதிய அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருக்கும் இல்லத்துக்கே செல்லுமாறு ரோஹித்தவிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.

நாட்டின் அதிபர் என்றபோதும், கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு ஒதுக்கப்பட்ட அதிபர் மாளிகையில் தங்கியிருக்காமல் தொடர்ந்து மிரிஹானவில் உள்ள வீட்டிலேயே வசித்து வருகிறார்.

BBC