மலேசியர்கள் ஜொகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல அனுமதிக்கும் வகையில், எல்லை வாயில்களைத் திறந்துவிடும் திட்டம் குறித்து, வெளியுறவு அமைச்சு சிங்கப்பூர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் முன்மொழியப்பட்ட செந்தர இயங்குதல் நடைமுறையை (எஸ்ஓபி) ஜொகூர் அரசாங்கமும் ஜொகூர் மாநிலச் சுகாதாரத் துறையும் இணைந்து தயாரித்துள்ளன. தற்போது அதனை மலேசிய சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது என மூத்த அமைச்சர் (தற்காப்பு) இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
“சிங்கப்பூரில் பணிபுரியும் நம் மக்களில் கிட்டத்தட்ட 200,000 பேர் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்கிறார்கள் என்பதை நான் அறிகிறேன்.
மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை இது உள்ளடக்கியுள்ளதால், இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சு இன்னும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
“எஸ்ஓபி திட்டம் தொடர்பாக, சிங்கப்பூர் சுகாதார அமைச்சுடன் மலேசிய சுகாதார அமைச்சு பேசிவருகிறது, உடன்பாடு ஏற்பட்ட பின்னர், இரு நாட்டின் வெளியுறவு அமைச்சுகளும் பயணத்திற்கான அனுமதி அடிப்படையில் விவாதிக்கும்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.