“போலீஸ் மீது அவதூறு கூறியதற்காக அஸ்மின் விசாரிக்கப்படுகிறார்”

போலீஸ் மீது அவதூறு கூறியதாக சொல்லப்படுவது தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி விசாரிக்கப்படுகிறார்.

அந்தத் தகவலை பெரித்தா ஹரியான் நாளேட்டிடம் ஜோகூர் போலீஸ் தலைவர் முகமட் மொக்தார் முகமட் ஷரிப் உறுதி செய்தார்.  செய்தி இணையத் தளம் ஒன்றில் அஸ்மினுடைய கருத்துக்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த கோம்பாக் எம்பி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

“அஸ்மினுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அவருடன் நாங்கள் தொடர்பு கொண்டோம். ஆனால் கட்சி விவகாரங்கள் காரணமாக சரவாக் சென்றுள்ளார். அதனால் அவர் உடனடியாக வாக்குமூலம் அளிக்க முடியவில்லை.”

“தமது சரவாக் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டதும் ஜோகூர் போலீஸ் தலைமையகத்துக்கு வருமாறு விசாரணை அதிகாரி அஸ்மினிடம் கூறியுள்ளார்,” என மொக்தார் பெரித்தா ஹரியானிடம் தெரிவித்தார்.

ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்ட பின்னரே வாக்குமூலம் கொடுப்பதற்கு அஸ்மின் அழைக்கப்பட்டதாக மொக்தார் தெளிவுபடுத்தினார்.

அம்னோ கோட்டையெனக் கருதப்படும் ஜோகூரில் மூன்று நாட்களுக்கு நடைபெற்ற பிகேஆர் பேரவைக்குப் பின்னர் கட்சி ஏற்பாடு செய்திருந்த பல அரசியல் சொற்பொழிவு நிகழ்வுகளுக்கான அனுமதிகளை ஜோகூர் போலீஸ் ரத்துச் செய்து விட்டது அல்லது தடுத்து விட்டது என பிகேஆர் துணைத் தலைவர் நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் கூறிக் கொண்டிருந்தார்.

“நாங்கள் ஒவ்வொரு நாள் இரவும் 14 தொகுதிகளிலும் 15 முதல் 20 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்கான அனுமதிகள் சில நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்தன. அவை நேற்றிரவு ரத்துச் செய்யப்பட்டன,” என்று அஸ்மின், பிகேஆர் இளைஞர், மகளிர் பிரிவுப் பேரவைகளைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

அஸ்மினுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக போலீசார் அவரைத் தேடிக் கொண்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின.