எம்.கே.என். ஒப்புதல் அளிக்கவில்லை, தலையீடு இருந்தது – பி இராமசாமி

இன்று அதிகாலை, பினாங்கு நகரில் நடந்த தைப்பூச இரத ஊர்வலத்திற்கு மாநில அரசும் தேசியப் பாதுகாப்பு மன்றமும் (எம்.கே.என்.) அனுமதி வழங்கவில்லை என்று துணை முதல்வர் II பி இராமசாமி தெரிவித்தார்.

மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணனின் “கூட்டாட்சி தலையீட்டை” தொடர்ந்து, ஊர்வலத்தைத் தொடர செட்டியார் கோயில் நிர்வாகம் துணிந்தது என்றும் அவர் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து, முன்னதாக பினாங்கு மாநில அரசு தைப்பூசக் கொண்டாட்டத்தை இரத்து செய்திருந்ததோடு, இந்துக்களை வீட்டில் பிரார்த்தனை செய்யுமாறும் வலியுறுத்தியது.

இருப்பினும், பத்துமலையில் தைப்பூச இரத ஊர்வலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர், ஊர்வலம் நடத்த நாட்டுகோட்டை செட்டியார் கோயில் முறையீடு செய்ததாக இராமசாமி கூறினார்.

சரவணனின் தலையீட்டைக் கேட்டபோது, கோவிலின் முறையீடு குறித்து மாநில அரசு இதுவரை விவாதிக்கவில்லை என்று இராமசாமி கூறினார்.

“சரவணனின் தலையீட்டைத் தொடர்ந்து செட்டியார் கோயில் தைரியமாக செயல்பட்டுள்ளது என என்னிடம் கூறப்பட்டது.

“இன்று வரை, பினாங்கில் இரத ஊர்வலத்திற்கு மாநில அரசும், எம்.கே.என்.-உம் ஒப்புதல் அளிக்கவில்லை.

“செட்டியார் கோயிலின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். மேலும், மாநில அரசு மற்றும் எம்.கே.என்.-இன் அறிவுறுத்தல்களை மீறியதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசு விவகாரங்களில் தலையிட்டதற்காக சரவணனையும் இராமசாமி விமர்சித்தார்.

மனிதவள அமைச்சரைத் தொடர்பு கொண்டபோது, ​​பினாங்கு துணை முதல்வரை அழைத்து இந்த விஷயம் குறித்த விளக்கத்தை வழங்கவுள்ளதாகக் கூறினார்.

மலேசியாகினி செட்டியார் கோயில் நிருவாகத்தையும் எம்.கே.என்.-யும் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளைப் பெற முயற்சித்துள்ளது.