இராகவன் கருப்பையா, உழைப்பாளிகள் தின கட்டுரை
தொழிற்சாலை விபத்தொன்றில் தனது வலது கரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், அந்த அசம்பாவிதத்தை ஒரு சவாலாக ஏற்று சற்றும் ஊக்கம் குன்றாமல் உழைத்து வாழ்க்கையில் முன்னேறியவர்தான் பேராக், கோப்பெங் நகரைச் சேர்ந்த செல்வம்.
மருத்துவமனைக்கு படையெடுத்த குடும்பத்தினரும் உறவினர்களும் தனது நிலையைப் பார்த்து கதறியழுத போது, “ஏன் அழுகிறீர்கள்? உயிரா போச்சி? கைதானே போனது,” என்று குறிப்பிட்ட அவர், “இனிமேல்தான் என் வாழ்க்கை ஆரம்பம்,” என சிரித்துக் கொண்டே அவர்களுக்கு சமாதானம் கூறியுள்ளார்.
கடந்த 1960களில் கோப்பெங்கில் செயல்பட்ட ஈயச் சுரங்கமொன்றில் பணியாற்றிய மாரியப்பன், செல்லமால் தம்பதிகளின் 5 பிள்ளைகளில் கடைசியாகப் பிறந்த செல்வம் தனது ஆரம்பக்கால கல்வியை கோப்பெங் தமிழ் பள்ளியில் நிறைவு செய்துள்ளார்.
பிறகு கோப்பெங் இட்ரிஷ் ஷா இடைநிலைப் பள்ளியில் 5ஆம் படிவம் பயின்ற போதே பகுதி நேரமாக கட்டுமானத் துறையில் சிறு சிறு வேலைகளை செய்து பெற்றோரின் நிதிச் சுமையைக் குறைக்க உதவியுள்ளார்.
இடைநிலைக் கல்விக்குப் பிறகு தனியார் கல்லூரி ஒன்றில் கட்டிட வரைபடத்துறையில் தொழில் கல்வியைத் தொடர்ந்த செல்வத்திற்கு ஓரிரு ஆண்டுகளில் பேரிடி விழுந்தது. பொருளாதாரச் சிக்கலை எதிர் நோக்கிய அக்கல்லூரி திடீரென இழுத்து மூடப்பட்டதால் அவர் திக்கு முக்காடிப் போனார்.
இருந்த போதிலும் மனம் தளராமல் தனக்கு இருந்து கொஞ்ச நந்ச அனுபவத்தைக் கொண்டு மொத்தம் 14 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி கட்டுமானத் துறையில் துணை குத்தகையாளராக சிறிய அளவில் தொழிலைத் தொடக்கியுள்ளார்.
இத்தருணத்தில் விஜயலட்சுமி என்பரை கரம் பிடித்தார் செல்வம். அவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 1986ஆம் ஆண்டு வாக்கில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து குத்தகைத் தொழிலையும் தொடர முடியாமல் போனதால் 1988ஆம் ஆண்டில் அரச மலேசிய காவல் துறையில் சேர்ந்துள்ளார் செல்வம்.
காவல் துறையில் பயிற்சிகள் முடிந்த கையோடு முதல் மாத சம்பளமான 360 ரிங்கிட்டைப் பார்த்து வேதனையடைந்த அவர் அவ்வேலையை உடனே ராஜினாமா செய்துவிட்டு சிங்கப்பூர் சென்றார்.
சிங்கையில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக சுமார் 3 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு மீண்டும் கோப்பெங் திரும்பிய செல்வம் அருகில் உள்ள நகரான சிம்பாங் பூலாயில் பளிங்குக் கல் பதனீடு செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு அமர்ந்தார்.
இங்குதான் அவருக்கு எதிர்பாராத அந்தப் பேரிடர் நிகழ்ந்தது. பாரம் தூக்கி இயந்திரத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட சதுர வடிவிலான பல பளிங்குக் கற்கள் திடீரென சரிந்து விழ, செல்வத்தின் வலது கை அவற்றுக்கடியில் சிக்கிக் கொண்டது. உடனே அவர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போதிலும் நசுங்கிப் போன கையை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை.
தனது முழங்கையின் மூட்டு வரையில் துண்டிக்கப்பட்ட நிலையிலும், வாழ்க்கையில் உயர வேண்டும் எனும் வேட்கையில் எவ்விதத் தளர்வும் ஏற்படவில்லை என்று கூறிய செல்வம், நண்பர் ஒருவரின் உந்துதலின் பேரில் தலைநகரில் நடைபெற்ற தன்முணைப்பு கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டதான் தனது வாழ்க்கையின் இலக்கை செம்மைப்படுத்தியது என்றார்.
உற்சாகத்தோடு வீடு திரும்பிய அவர், கையில் இருந்த கொஞ்சம் சேமிப்பைக் கொண்டு பழைய சுமையுந்து ஒன்றை வாங்கி போக்குவரத்துத் தொழிலைத் தொடக்கினார். அதாவது சிம்பாங் பூலாய் மற்றும் கேமரன் மலைப் பகுதிகளில் உள்ள காடுகளில் மூங்கில்களை வெட்டி தொழிற்சாலைக்கு அனுப்பும் குத்தகையைப் பெற்று அத்தொழிலில் ஈடுபட்டார்.
காடுகளில் மூங்கில்களை வெட்டி சுமையுந்தில் ஏற்றுவதற்கு அப்பகுதிகளில் உள்ள ‘ஓராங் அஸ்லி’ எனப்படும் பூர்வக் குடியினர் சிலரை செல்வம் வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.
தொழிற்சாலையில் அந்த மூங்கில்கள் அரைக்கப்பட்டு பல விதமான கடுதாசிகள் செய்யப்பட்டு கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கதவுகளோ இதர பாதுகாப்பு அம்சங்களோ இல்லாத ‘லோரி ஹந்து’ எனப்படும் அந்த சுமையுந்தை ஒற்றைக் கையைக் கொண்டு காட்டுப் பகுதிகளில் ஓட்டுவது சற்று சிரமம்தான் எனும் போதிலும் அச்சாவலை தாம் சமாளித்துக் கொண்டதாக் செல்வம் விவரித்தார்.
எனினும் சுமார் 3 ஆண்டுகள் கழித்து அவருக்கு மற்றொரு சோதனை ஏற்பட்டது. திடீரென ஒருநாள் அந்த சுமையுந்து தடம் மாறி குப்புறக் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி அத்தொழிலையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. இடது கையில் உள்ள விரல்களில் முறிவு ஏற்பட்டு சுமையுந்து ஓட்ட முடியாத நிலையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சுமார் 5 ஆண்டுகளுக்கு காப்புறுதி முகவராக பணியாற்றிக் கொண்டே பகுதி நேரமாக ‘சிங்ஙர்’ பொருள்கள் விற்பனையாளராகவும் இருந்துள்ளார் செல்வம்.
பிறகு 1998ஆம் ஆண்டில் கேமரன் மலையில் சொந்தமாக ‘சிங்ஙர்’ கடையொன்றைத் திறந்து 4 ஆண்டுகளுக்கு நடத்திய போதிலும் விற்பனை மந்தமாக இருந்ததால் அதனை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன் பிறகு நிலங்களை வாங்கி, விற்னை செய்யும் தொழிலில் ஈடுபட்ட செல்வம் செம்பனைத் தோட்டம் ஒன்றையும் வாங்கினார். அதோடு நின்றுவிடாமல் தனது வீட்டிற்கு அருகிலேயே கைபேசி பழுது பார்க்கும் கடையொன்றைத் திறந்ததோடு சிறிய உணவகம் ஒன்றையும் திறந்து நடத்தி வருகிறார்.
அதே வட்டாரத்தில் தையல் கடையொன்றையும் திறந்துள்ள செல்வம், கிளிகளை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டுளார்.
ஓ.கே.யு. எனப்படும் பேறு குறைந்தவர்களுக்கான சலுகைகளில் ஒன்றாக தாப்பா பகுதியில் அரசாங்கம் அவருக்கு விவசாய நிலம் ஒன்றை வழங்கியுள்ளது. அதனை செம்மையாக பயன்படுத்திக் கொண்ட செல்வம் அங்கு ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிவற்றோடு எழுமிச்சை மற்றும் டுரியான் தோட்டங்களையும் நிர்வகித்து வருகிறார்.
இந்த உழைப்பாளியின் மூத்த மகள் சாந்தினி சிங்கப்பூரில் தாதியாக பணியாற்றும் வேளையில் மகன் சரவணன் அங்கு கடல்துறை பொறியியலாளராக உள்ளார். இரண்டாவது மகள் ஹேமா காப்பாரில் சுய தொழில் செய்துவரும் வேளையில் கடைசி மகள் சந்தியா கோப்பெங்கில் தனியார் நிறுவனமொன்றில் மனிதவளத்துறை மேலாளராக உள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் கையிலிருக்கும் தொழில்களை செல்வம் வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.
எந்தநிலையிலும் சவால்களை ஏற்றுக் கொண்டு மனம் தளராமல் கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறார்.