இலங்கையில் துறைமுகங்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்புக் குரல் ஒலித்து வருகிறது. இதில், தொழிற்சங்கங்கள், பொது மக்கள், எதிர்க்கட்சிகள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.
இப்போது இலங்கையின் ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியாவுடனான ஒரு டிரான்ஸ் ஷிப்மென்ட் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது.
இந்த டிரான்ஸ் ஷிப்மென்ட் திட்டம் கிழக்கு கொள்கலன் முனையம் (East container terminal) என்று அழைக்கப்படுகிறது. இதை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 2019 மே மாதம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன – பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் போது செய்யப்பட்டது, இதை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செய்யவிருந்தன. இந்தியத் தரப்பிலிருந்து, அதானி துறைமுகம் இந்தத் திட்டத்தில் பணியாற்றவிருந்தது.
இந்த ஒப்பந்தம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான முத்தரப்பு ஒப்பந்தம். இதில் 51 சதவீத பங்குகளை இலங்கையும், 49 சதவீத பங்கை இந்தியாவும் ஜப்பானும் வைத்திருந்தன.
திங்களன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, துறைமுகங்களை தனியார்மயமாக்குவதை எதிர்க்கும் தொழிற்சங்கங்களிடம், கிழக்கு கொள்கலன் முனையத்தின் 100 சதவீதப் பங்கும் இலங்கை துறைமுக ஆணையத்திற்குச் (SLAP) சொந்தமானதாக இருக்கும் என்று கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவரது அறிக்கைக்குப் பிறகு, இந்தியாவுடனான கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளதாகச் செய்தி வந்தது.
ஈஸ்ட் கன்டெய்னர் டர்மினலின் முக்கியத்துவம் என்ன?
இந்தக் கொள்கலன் முனையம் வியூக ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்தப் பிராந்தியத்தின் மொத்த வணிகத்தில் சுமார் 70% இதன் மூலமே செய்யப்படுகிறது. இது, கொழும்புவுக்கு அருகில் உள்ளது. அண்டை நாடாக இருப்பதால், இந்தியாவும் இதை அதிகம் பயன்படுத்துகிறது.
கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு பதில் இப்போது மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் உதவியுடன் இயக்க இலங்கை அரசு விரும்புகிறது. இதன்படி, இந்தியா மற்றும் ஜப்பானுடன் அரசு- தனியார் கூட்டாண்மை அடிப்படையில் இலங்கை அதை உருவாக்க விரும்புகிறது. இருப்பினும், இதுவரை புதிய திட்டம் குறித்து இந்திய அரசு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்நாட்டு அரசியல்
சமீபமாக இந்தியா 5 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை இலங்கைக்கு அனுப்பியது. இலங்கைஅரசும் இந்திய அரசின் இந்த முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரும் இலங்கையை, இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு என்று பாராட்டினார்.
பின்னர் இலங்கை அரசு ஏன் இந்த முடிவை எடுத்தது?
ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, இதன் பின்னணியில் உள் நாட்டு அரசியலும் தொழிற்சங்கத்தின் தலையீடும் இருப்பதாக கருதுகிறார்.
சென்னையில் இருந்து பேசிய அவர், “இலங்கையை ஆளும் எந்த அரசும் தொழிற்சங்கத்துக்கு விரோதமான எந்த நடவடிக்கையையும் எடுக்கத் துணியாது. அந்த அளவுக்குத் தொழிற்சங்கங்களுக்கு அரசியல் தலையீடு உள்ளது. அவர்களின் அதிருப்திக்கு ஆளாகும் எந்தக் கட்சிக்கும் அது பெரிய இழப்பாகவே இருக்கும். சில கட்சிகள் இதை ஒப்புக்கொள்கின்றன, சில ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் இது அனைத்துக் கட்சிக்கும் பொருந்தும். முந்தைய அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், அவர்களது ஆட்சிக்காலத்தில் கூட இதன் பணிகளை தொடங்க முடியவில்லை.” என்று கூறுகிறார்.
இத்தகைய சூழ்நிலையில், இந்தத் திட்டத்தில் இந்தியா இதில் ஈடுபடுவதை தொழிற்சங்கம் விரும்பாத நிலையில், ஆளும் கட்சி அதன் கோபத்திற்கு ஆளாக விரும்பாது.
மூத்த பத்திரிகையாளர் டி.ஆர்.ராமச்சந்திரன் இந்தியாவுடனான திட்டத்தை ரத்து செய்வதற்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாகக் கருதுகிறார். முதல் காரணம், இந்தியாவின் தமிழ்ச் சமூகம் மற்றும் இலங்கையின் சிங்களச் சமூகம் ஆகியவற்றுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் என்கிறார் அவர்.
“தமிழ்ச் சமூகத்தினர் அங்கு சிறுபான்மையினராகக் கருதப்படுகின்றனர். இந்தியாவிலிருந்து வரும் எந்த உதவியும் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆதிக்கமாகவே அவர்களால் பார்க்கப்படுகிறது. எனவே அங்குள்ள தொழிற்சங்கத்தினர், இந்தியாவின் உதவியுடன் எந்தத் திட்டமும் வருவதை விரும்பவில்லை. துறைமுகத் தொழிற்சங்கத்தில் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் இருந்தாலும், சிங்களர்களின் ஆதிக்கமே நிலவுகிறது,” என்று அவர் கூறுகிறார்.
கடந்த ஒன்றரை மாதங்களாக தனியார்மயமாக்கலுக்கு எதிராகக் குரல்கள் எழுப்பப்பட்டு வருவதாகவும், ஆளும் கட்சி பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இதன் காரணமாக ஆட்சிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று ஆளும் கட்சி அஞ்சுகிறது. துறைமுகத் தொழிற்சங்கம் தனியார்மயமாக்கலை எதிர்ப்பது மட்டுமல்லாமல், இப்போது பொது மக்களும் அவர்களுடன் சேர்ந்துள்ளனர்.
இலங்கையில் சீனாவின் தலையீடு
டி.ஆர்.ராமச்சந்திரன், சீனாவின் அதிகரித்துவரும் அழுத்தத்தை இலங்கையின் இந்த முடிவின் பின்னணியில் உள்ள இரண்டாவது காரணியாகக் கருதுகிறார்.
“அடுத்த 15-20 ஆண்டுகளில், இலங்கையின் மக்கள் தொகையில் முழு ஆதிக்கத்தைச் சீனா பெற்றுவிடும். அந்த அளவுக்கு இன்று சீனர்களின் தொகை அங்கு அதிகரித்துள்ளது. இலங்கையில் தற்சமயம் சீனாவின் திட்டங்கள் பல நடைமுறையில் உள்ளன. அவற்றிலிருந்து சீனா வெளியேற்றப்படவில்லை. இது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். ” என்பது அவர் கருத்து.
“சிறு சிறு நாடுகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கி அவர்களை அடிமைப்படுத்துவதே சீனாவின் உத்தியாக உள்ளது. இலங்கையிலும் இதுவே நிலை. இதனால், சிறிய நாடுகளுக்குத் தங்களின் நன்மை தீமைக்கான முடிவுகளை எடுக்கும் திறன் இல்லாமல் போய் விடுகிறது.” என்று விளக்குகிறார் டி.ஆர்.ராமச்சந்திரன் .
இதற்கு உதாரணமாக ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை அவர் குறிப்பிடுகிறார்.
சீனாவின் கடனை அடைக்க முடியாததால், இலங்கை, ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவின் மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட்டது. 2017 ஆம் ஆண்டில், இந்த துறைமுகம் 1.12 பில்லியன் டாலருக்கு அந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனுடன், அருகிலுள்ள சுமார் 15,000 ஏக்கர் நிலமும் தொழில்துறை மண்டலமாக சீனாவுக்கு வழங்கப்பட்டது.
ஒரே நேரத்தில் இந்தியா, சீனா இரு நாடுகளுடனும் சமரச முயற்சி
இந்தியாவின் வெளியுறவு விவகாரங்கள் பிரிவின் மூத்த பத்திரிகையாளரும், டைம்ஸ் ஆப் இந்தியாவின் இராஜரீக பிரிவின் ஆசிரியருமான இந்திராணி பாக்ச்சியும் இந்த முடிவுக்குப் பின்னால் சீனாவும் ஒரு காரணம் என்று கருதுகிறார்.
பிபிசியுடனான உரையாடலில், “கிழக்கு கொள்கலன் முனையத்தில் இலங்கையின் 100% பங்குகளை தொழிற்சங்கம் விரும்பினால், அங்குள்ள அரசாங்கம் ஏன் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு முன்மொழிகிறது? தொழிற்சங்கத்திற்கு அதில் எந்த பிரச்னையும் இல்லையா? சீனாவுடனான எந்தத் திட்டத்திலும் இவ்வாறு தடையில்லையே ஏன்?,” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
அவர் மேலும் கூறுகையில், “சிறிசேன அரசு இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்ட போதும், சீனா பெரும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தது. ராஜபக்ஷ சீனாவுக்கு நெருக்கமாக இருப்பவர் என்ற கருத்தும் நிலவுகிறது. புதிய அரசாங்கம் சீனாவுடன் பொருளாதார உடன்படிக்கைகளையும் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் செய்து கொண்டு, இருவருடனும் சமரசம் செய்ய முயற்சிக்கிறது.” என்று தெரிவிக்கிறார்.
பொருளாதார ரீதியில் ஒரு நாட்டுடனும் பாதுகாப்பு ரீதியில் இன்னொரு நாட்டுடனும் உடன்பட்டிருப்பது என்பது நடைமுறையில் சிக்கலானது என்று இந்திராணி கூறுகிறார்.
இலங்கை அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு நிச்சயமாக இந்திய அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கு விழுந்த ஒரு அடியாகும்.
ஆனால் இந்திராணி இதை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாகக் கருதவில்லை. ஒரு திட்டம் கை நழுவிப் போனதால் அப்படிச் சொல்லி விட முடியாது என்றாலும், இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் எப்போதும் சிக்கலானவையே என்றும் இது ஒரு புதிய விஷயம் அல்ல என்றும் அவர் கூறுகிறார்.
புதிய அரசுடன் இந்தியாவின் நெருக்கம்
2019 நவம்பரில் இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து, இதுவரை இந்தியா இதுபோன்ற பல முயற்சிகளை எடுத்துள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகரித்து வரும் இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாகவே காணப்பட்டது.
இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டபோது முதலில் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் மறுநாள் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்குச் சென்றார். அவர் கோத்தபய ராஜபக்ஷவைச் சந்தித்தார், மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில், இந்தியாவுக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார்.
இதன் பின்னர் கோதபய ராஜபக்ஷ நவம்பரில் இந்தியாவுக்கு விஜயம் செய்தார், இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான உறவு ஏற்பட்டது.
இந்த விஜயம் தொடர்பாக இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை கண்காணித்த நிபுணர்களுக்கு வியப்பு ஏற்பட்டது. ஏனென்றால் கோத்தபய, சீனாவுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்பட்டது.
இதன் பின்னர், ஜனவரி மாதம் இலங்கை சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியாவின் தரப்பிலிருந்து இலங்கைக்கு 50 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்ற உறுதிமொழியும் அளித்தார்.
அண்மையில், கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பு மருந்தும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பியுள்ளார். ஆனால் மோடி அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையை இந்தியாவின் பக்கம் ஈர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை என்பது போல் இன்றைய நிலை உள்ளது.
இலங்கை அரசு தனது முடிவைத் திரும்பப் பெற வைக்க இந்திய அரசின் முயற்சிகள் இன்னும் தொடர்வதாக மூத்த பத்திரிக்கையாளர் டி.ஆர்.ராமச்சந்திரன் கூறுகிறார்.
“இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி இலங்கை செய்தித்தாள்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்த பிரச்னையை இலங்கை அரசாங்கத்தால் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. இந்திய அரசு நம்பிக்கையிழக்கவில்லை. இந்த விவகாரம் சற்று சிக்கலானதும் தீவிரமானதும் கூட என்பதால் தீர்வு காண கால தாமதாம் ஆகலாம்” என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய அளவிலான டிரான்ஸ்ஷிப்மென்ட் துறைமுகத்தை இந்தியா கட்டினால், இலங்கை மீதான சார்புநிலையைக் குறைக்க முடியும் என்று இந்திராணி கூறுகிறார். இது இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டாலும், இலங்கையும் இதனால் அதிகம் பாதிக்கப்படும். ஆனால், இலங்கை சீனாவுடன் இன்னும் நெருக்கமாகச் செல்லவும் நேரலாம்.
BBC