முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி தமது கோம்பாக் செத்தியா சட்ட மன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் போட்டியிட உள்ளூர் கிளைகளிடமிருந்து போதுமான நியமனங்களைப் பெறவில்லை என்பதை சிலாங்கூர் பாஸ் உறுதி செய்துள்ளது.
ஒவ்வொரு தொகுதியும் மூன்று நியமனங்களைச் சமர்பிக்கும். பின்னர் அதனைக் கட்சி மத்தியத் தலைமைத்துவம் பரிசீலிக்கும் என மாநில தகவல் பிரிவுத் தலைவர் சாஆரி சங்கிப் தொலை பேசி பேட்டி ஒன்றில் கூறினார்.
“ஹசானுக்கும் நியமனங்கள் கிடைத்துள்ளன. ஆனால் மற்ற மூன்று தனிநபர்களை விட அது குறைவு. அது போதுமானது அல்ல. முற்றாக இல்லை எனச் சொல்லக் கூடாது”, என்றார் அவர்.
ஆகவே மாநிலத் தலைமைத்துவ நிலையில் வேட்பாளர் பட்டியலில் ஹசானுடைய பெயர் இல்லை. என்றாலும் மத்தியத் தலைமைத்துவம் அவரை பின்னர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியும் என சாஆரி சொன்னார்.
வேறு இடங்களில் ஹசான் நிறுத்தப்படும் சாத்தியம் உள்ளதா என்னும் கேள்விக்குப் பதில் அளித்த அவர், அதற்கான சாத்தியம் மிகவும் குறைவு எனச் சொன்னார்.
“வழக்கமாக மாநிலத் தொகுதிகளுக்கு அந்தப் பகுதிகளில் உண்மையில் வசிக்கின்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது”, என உலு கிளாங் சட்ட மன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
முன்பு சிலாங்கூர் பாஸ் கட்சிக்கு தலைவராக இருந்த ஹசான், மாநில ஆட்சிமன்றத்தில் இடம் பெற்றுள்ள பாஸ் பேராளர்களில் உயர்ந்த பதவியை வகிக்கிறார்.
ஆனால் அவர் பல விவகாரங்களில் மாநில அரசாங்க முடிவுகளுக்கு முரணான நிலையை எடுத்ததின் மூலம் பக்காத்தான் வழி நடத்தும் மாநில அரசாங்கத்துடன் மோதியிருக்கிறார்.
மதம் மாற்றம் நிகழ்வதாக கூறப்பட்டது மீது சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்) டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் மேற்கொண்ட ‘சோதனை’ தொடர்பான சர்ச்சையும் அந்த விவகாரங்களில் அடங்கும்.
ஹசானுக்கு எதிராக தடை உத்தரவு
பின்னர் அந்த சர்ச்சை மீது ஹசான் அறிக்கை விடுக்கக் கூடாது என்று மாநில அரசாங்கம் தடை விதித்தது. அதற்கு முன்னதாக முஸ்லிம் அல்லாதவர்கள் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது ஹசான் வெளிப்படையாக பேசியதைத் தொடர்ந்து அதன் மீது அவர் பேசுவதற்கு மத்திய பாஸ் தலைமைத்துவம் தடை விதித்தது.
2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹசானை கோம்பாக் செத்தியாவில் நிறுத்துவது என்ற முடிவு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. கீழ் நிலை உறுப்பினர்கள் அவரை ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது.
கட்சியின் நிலையையும் பக்காத்தான், மாநில அரசு கொள்கைகளை அவர் வெளிப்படையாக மீறுவதும் பாஸ்-அம்னோ அரசியல் கூட்டணியை வலியுறுத்தும் ஒற்றுமை அரசாங்கக் கோட்பாட்டுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதும் கட்சியிலும் வாக்காளர்களிடத்திலும் ஆதரவைப் பெறவில்லை.
1999ம் ஆண்டு முதன் முறையாகப் போட்டியிட்ட அவர், சுங்கை பூரோங் சட்டமன்றத் தொகுதியிலும் பாரிட் புந்தார் நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஆனால் 2004ல் அவ்விரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்.
ஹசானுடைய கருத்துக்களை பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இந்தச் செய்தி எழுதப்படும் வரையில் பயன் தரவில்லை.