விவசாயிகள் போராட்டம் குறித்து இங்கிலாந்து எம்.பிக்கள் விவாதம்: இந்தியா விமர்சனம்

விவசாயிகள் போராட்டம், பத்திரிகை சுதந்திரம் குறித்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 90 நிமிடங்கள் விவாதம் நடந்தது.

புதுடெல்லி, இந்தியாவில்  கடந்த 100 நாட்களுக்கும் மேலாக  வேளாண் சட்டங்களை  எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இந்தப் போராட்டமானது உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென அதன் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி, இந்திய வம்சாவளியினரிடம்  இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் வாங்கிய மனுக்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து,  பாராளுமன்றத்தில் இது குறித்த விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “ சீரான விவாதத்திற்கு பதிலாக ஆதாரம் மற்றும் உண்மை இல்லாமல் நடந்த விவாதம் வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

dailythanthi