முஸ்லீம் அல்லாதவர்கள் ‘அல்லாஹ்’ எனும் சொல்லைப் பயன்படுத்துவதற்கான தடை சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம்

இன்று, “அல்லாஹ்” என்ற வார்த்தையை முஸ்லீம் அல்லாதவர்கள் பயன்படுத்தத் தடை விதிப்பதில் அரசாங்கம் தவறு செய்ததாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனவே, ஒரு மெலனாவ் இனக் கிறிஸ்தவப் பெண்ணுக்கு “அல்லாஹ்” என்ற வார்த்தையை மத மற்றும் கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்த உரிமை உண்டு என்றும் அதே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நீடித்த ஒரு நெருக்கடி வழக்கில், ஜில் அயர்லாந்தின் சட்ட நடவடிக்கைக்கு நீதிபதி நோர் பீ அரிஃபின் இன்று அனுமதி அளித்தார்.

கடந்த மே 11, 2008-ல், ‘அல்லாஹ்வினுடைய இராஜ்யத்தில் எப்படி வாழ்வது’, ”அல்லாஹ்வினுடைய இராஜ்யத்தில் உண்மையான வாழ்க்கை’ மற்றும் ”அல்லாஹ்வினுடைய இராஜ்யத்தில் உண்மையான வழிபாடு’ என்ற தலைப்பிலான குறுவட்டு, செப்பாங் விமான நிலையத்தில், ஜில் அயர்லாந்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட சிடியைத் திருப்பித் தரவும், இழப்பீடு வழங்கவும் கோரி அந்த மெலனாவ் பெண், ஆகஸ்ட் 20, 2008 அன்று நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார்.

குறுந்தட்டை அயர்லாந்திடம் திருப்பித் தர வேண்டுமென்ற கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் முடிவை, 23 ஜூன் 2015 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

‘அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து அயர்லாந்து விண்ணப்பித்த அறிவிப்பை மீண்டும் கேட்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.