சியாமளா கோலி பாக் ஜல சந்தியில் நீந்திய போது
தெலங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி (48), என்கிற பெண் இலங்கை தலைமன்னார் முதல் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணை பகுதியில் கடலை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
தமிழ்நாட்டையும், இலங்கையையும் பாக் நீரிணை கடற்பகுதி பிரிக்கிறது. ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள ராமர் பாலம் என அழைக்கப்படும் மணல் திட்டுக்களும் பாக் நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கின்றன.
முதல் இந்திய பெண்மணி
இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் அந்த கடல் நீரில் பாறைகள், ஆபத்தான கடல் பாம்புகள், ஜெல்லி மீன்கள் மற்றும் பிற ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட பாக் நீரிணை கடலை இடைவிடாமல் நீந்துவது சாதாரண செயல் அல்ல.
30 கி.மீ. நீளம் உள்ள இந்தக் கடற்பகுதியை சியாமளா கோலி கடந்து சாதனை படைத்துள்ளார். இந்தக் கடலை நீந்திக் கடந்த முதல் இந்திய பெண்மணி, உலகின் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை இதன் மூலம் பெற்றிருக்கிறார் சியாமளா.
ஏற்கெனவே பல்வேறு நீச்சல்போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தவர் இவர்.
யார் இந்த சியாமளா கோலி
சியாமளா கோலி தெலுங்கானவில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சமூகவியல் மற்றும் இணைய தள வடிவமைப்பு மற்றும் மல்டிமீடியா (Web Designing and Multimedia) படிப்பில் பட்டம் பெற்றவர்.
இவர் ‘ஜி.எஸ் டிஜிட்டல் ட்ரீம் டிசைனர் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அனிமேஷனில் ஆர்வம் கொண்ட சியாமளா கோலி ‘பரமநந்தாயா ஷிஷியுலு’ என்ற நகைச்சுவை அனிமேஷன் சீரியலை தயாரித்து இயக்கினார். இந்த சீரியல் ஐதராபாத்தில் உள்ள தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
இவர் ‘GOWRI’ கதையை எழுதி 2டி அனிமேஷனில் இயக்கியுள்ளார். இந்த படம் குழந்தைகளுக்கான கருத்துகளையும், நகைச்சுவையையும் கொண்டதாக உருவாக்கபட்டது. தற்போது சியாமளா கோலி குழு ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் 2டி அனிமேஷன் அம்ச திரைப்படத்தை உருவாக்கி வருகிறது.
13 மணி 43 நிமிடங்கள் இடைவிடாமல் கடலில் நீந்தி சாதனை
சியாமளா கோலி தலைமன்னாரின் குதிக்கிறார்
பாக் நிரிணையை நீந்தி கடக்கும் சாதனையை செய்வதற்காக கடந்த வாரம் சியாமளா கோலி தெலங்கானாவில் இருந்து ராமேஸ்வரம் வந்தார். சில நாள்களாக பாக் நீரிணையில் நீந்தி பயிற்சி செய்தார். பின்னர் கடந்த வியாழக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் ராமேஸ்வரம் அடுத்த சங்குமால் கடற்கரையில் இருந்து சியாமளா, அவரது பயிற்சியாளர் மற்றும் மீனவர்கள் என 13 பேருடன் 2 படகில் இலங்கை தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றார்.
சியாமளா கோலியின் குழு இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லையை கடந்து இலங்கை கடல் பகுதிக்குள் சென்றதும் இலங்கை கடற்படையின் வடக்கு பகுதி கமாண்டர் அவர்களை வரவேற்று ஆவணங்களை சரி பார்த்து பின் தலைமன்னார் கடற்படை முகாமில் தங்க வைத்தார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு இலங்கை தலைமன்னார் கடற்கரையிலிருந்து சியாமாளாவின் நீச்சல் பயணத்தை இலங்கை வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வேலுபிள்ளை கந்தையா சிவஞானம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இலங்கை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை பாதுகாப்புடன், நீச்சல் பயிற்சியாளர்களின் உதவியுடன் சியாமளா 13 மணி நேரம் 43 நிமிடங்கள் இடைவிடாமல் கடலில் நீந்தி ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு மாலை 5 மணி 50க்கு வந்தடைந்தார்.
இதன் மூலம் பாக் நீரிணையை நீந்தி கடந்த 13-வது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும் ஆனார். இந்த சாதனையை செய்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இடைவிடாமல் நீந்தி வந்த சியாமளாவை ராமேஸ்வரம் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகள் வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சியாமளா கோலி பாக் ஜல சந்தியை நீந்திக் கடந்து முடித்த பின் எடுத்த படம்
பாக் நீரிணை கடற்பகுதியை நீந்தி கடந்தவர்கள்
பாக் நீரிணை கடற்பகுதியை 1954ம் ஆண்டு இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக 27 மணி 8 நிமிடங்களில் நீந்திக் கடந்தார். அவரை தொடர்ந்து 1966-ல் கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் 29 மணி 25 நிமிடங்களில் இந்த கடலைக் கடந்தார்.
1994ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து வளர்ந்த குற்றாலீஸ்வரன் தனது 13 வது வயதில் 16 மணி நேரத்தில் பாக் நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்தார்.
2019-ல் தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த ஆர்.ஜெய் ஜஸ்வந்த் என்ற 10 வயது பள்ளி மாணவர் பாக் நீரிணையைக் நீந்திக் கடந்தார். அதுபோல், கடந்த 2020 பிப்ரவரியில் அமெரிக்காவை சேர்ந்த எடி ஹூ என்பவர் முதல் பெண்ணாக பாக் நீரிணை கடற்பகுதியை நீந்திக் கடந்தார்.
‘ராம சேது கடலில் நீந்துவது என் கனவு’
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சியாமளா கோலி, “எனக்கு 48 வயதாகிறது, நான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்தான் நீச்சல் கற்றுக் கொண்டேன்.”
‘ராம சேது கடலில் நீந்துவது எனது கனவு மற்றும் லட்சியம். கடந்த ஆண்டே பாக் நீரிணை கடலை நீந்திக் கடப்பதற்கு இந்திய – இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கொரோனா பரவல் காரணத்தினால் முடியாமல் போனது.’
“பாக் நீரிணையை ஒரு பெண்ணாக நான் நீந்தி கடந்தது, பெண்களால் அனைத்து உயர்ந்த இலக்குகளையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக இருக்கும்” என்றார்.
“இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வருவதற்கு இந்திய – இலங்கை அரசுகளிடம் முறையான அனுமதி பெற்றுள்ளேன். இதுவரை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே பலர் நீந்தி வந்து சாதனை புரிந்துள்ளனர். இருந்தாலும் இன்று நான் 13 மணி நேரம் 43 நிமிடத்தில் இடை விடாது நீந்திக் கடந்து சாதனைக்கு முயற்சி செய்தேன்” என்று கூறினார்.
“முதலில் 10 மணிநேரத்தில் நீந்தி கடந்து விட வேண்டும் என திட்டமிட்டிருந்தேன் ஆனால் இந்தியக் கடலில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் திட்டமிட்ட நேரத்தில் கடக்க முடியவில்லை. என்னுடைய இரண்டு ஆண்டு கனவு இன்று நிறைவேறியது” என்று கூறினார் சியாமளா.
BBC