`புதிய இடத்தைத் தேடுவதில் அவசரம் வேண்டாம்` – ம.இ.கா.வுக்கும் மசீசவுக்கும் புவாட் அறிவுறுத்து

தேசிய முன்னணியின் (பி.என்.) நிலைமை நிச்சயமற்றதாகவும் குழப்பமானதாகவும் இருக்கும் இந்நேரத்தில், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர், தங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

மொஹமட் புவாட் சர்காஷி, உண்மை நிலைமையை உணராமல் சார்ந்திருக்க ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடிப்பதில் ம.இ.கா.வும் மசீசவும் அவசரப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணியுடன் அந்த இரு கட்சிகளும் தங்கள் ஒத்துழைப்பைத் தொடரும் போக்கை அறிந்த மொஹமட் புவாட், அக்கூட்டணியில் ‘பிக் பிரதர்’ என்ற கருத்து இல்லை என்றக் கூற்றைச் சந்தேகிப்பதாகக் கூறினார்.

தேசியக் கூட்டணியில், அத்தகைய உணர்வு இல்லை என்பது உண்மை என்றால், மற்றக் கட்சிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சி இல்லையென்றால், அம்னோ நிச்சயமாக அவர்களுடன் இணைந்து செயல்படும் என்று மொஹமட் புவாட் கூறினார்.

“அக்கூட்டணியில் சகோதரத்துவ உணர்வு இருந்தால், அரசாங்கத்தை விட்டு வெளியேறாது, நிச்சயமாக அம்னோ அவர்களுடன் ஒத்துழைக்கும். மாறாக, அம்னோ அக்கூட்டணியில் ஒரு மாற்றாந்தாய் குழந்தை போலவே கருதப்படுகிறார்,” என்று அவர் கூறினார்.

முன்னாள் பத்து பஹாட் எம்.பி.யான அவர், கூட்டணியைத் தேர்வுசெய்யும் முன் ம.இ.கா.வும் மசீசவும் நன்கு யோசிக்க வேண்டும் என்றார்.

சில தரப்பினர் கூறுவதுபோல, தேசிய முன்னணியில் “பிக் பிரதர்” என்ற கருத்தை அம்னோ கடைப்பிடிக்கவில்லை என்றும், அது ஓர் அவதூறு என்றும் மொஹமட் புவாட் கூறினார்.

அப்படி இருந்திருந்தால், அக்கூட்டணி இவ்வளவு காலம் உயிர்வாழ முடியாது என்று அவர் கூறினார்.

“அம்னோ நீண்டகால சமூக ஒப்பந்தத்தை மதிக்கிறது. அம்னோ தாய்மொழிப் பள்ளிகளைப் பராமரிக்கிறது.

“பி.என். காலத்தில்தான், ​​இந்தியச் சமூக மேம்பாட்டு திட்டம் 2016 உருவாக்கம் கண்டது,” என்று அவர் மேலும் கூறினார்.