புத்தாண்டு குழப்பம் – சித்திரையா! தையா? -இராகவன் கருப்பையா

உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 கோடி தமிழர்கள்  நாளைய தினம் தங்களுடைய புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு தேவையான கடைசி நேர ஏற்பாடுகள் அனைத்தையும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை என்றே தெரிகிறது.

ஒரு சில நாள்களுக்கு முன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தலைமையில் கூடிய சுமார் 170 அமைப்புகளின் பிரதிநிதிகள் தமிழ் புத்தாண்டு தொடர்பான சர்ச்சையை மீண்டும் புதுப்பித்து மக்களை குழப்ப முற்பட்டுள்ளது வேதனையான விசயம்.

சித்திரை மாதத்தின் முதல் நாளைதான் தங்களுடைய புத்தாண்டாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் காலம் காலமாகக் கொண்டாடி வருகின்றனர். இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஏறத்தாழ 7 கோடி பேரை மக்கள் தொகையாகக்கொண்டுள்ள தமிழ் நாட்டிலும் கூட இதே நிலைதான்.

தமிழ் நாட்டின் எண்ணற்ற தொலைக்காட்சி நிலையங்களும் கூட இதனையே பறைசாற்றுகின்றன.

ஆனால் உழவர் தினமான தை மாதம் முதல் தேதிதான் தமிழர்களின் புத்தாண்டு என இன்னமும் சில தரப்பினர் வீண் விதண்டாவாதம் பேசி மக்களை குழப்பிக்கொண்டிருக்கினர்.

நமது முன்னோர்கள், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்றுதான் குறிப்பிட்டுள்ளார்களேத் தவிர ‘தை பிறந்தால் புத்தாண்டு பிறக்கும்’ என்று யாரும் கூறவில்லை.

தை மாதம் முதல் தேதி கொண்டாடப்படும் பொங்கல் திருநாள், உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிவித்தலாகக் கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு சிறு பிள்ளைகளுக்குக்கூட தெரியும்.

இதற்கும் புத்தாண்டுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதும் நம் எல்லாருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு என்ற உண்மையை யாரும் மறுக்கவோ மறைக்கவே முடியாது.

நிலைமை இவ்வாறு இருக்க, தேவையில்லாமல் ஏன் சிலர் குட்டையைக் குழப்புகிறார்கள் என்று தெரியவில்லை. பொழுது போகாதவர்களின் விஷமத்தனமான காரியம்தான் இதுபோன்ற வேலைகள் என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

எழுத்தாளர் சங்கம் அங்கும் இங்கும் அனாவசியமாக மூக்கை நுழைக்கக் கூடாது. அவர்களுக்கு எவ்வளவோ வேலைகளும் பொறுப்புகளும் உள்ளன.

குறிப்பாக தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ் எழுத்தாளர்களின் மேம்பாட்டுக்கும் நிறையவே காரியங்களை செயல்படுத்தவேண்டியிருக்கிறது. அவ்வாறான விசயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

அதனை விடுத்து தமிழர்களின் புத்தாண்டு சர்ச்சையை தூண்டிவிட்டு அவர்களுடைய நேரம் மட்டுமின்றி மற்றவர்களின் பொன்னான நேரத்தையும் வீணடித்து மக்களை குழப்புவது சற்று அதிகப்பிரசங்கித்தனம்தான்.

தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்திலும் நாடு முழுவதிலும் தமிழர்கள் அதிகமாக வாழும் இதர நகரங்களிலும் சித்திரைப் புத்தாண்டு களைகட்டியிருப்பதை நம்மால் இன்று காண முடிகிறது.

இந்நாட்டில் இதர இனத்தவர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேலும் மேலும் உயரிய நிலையை அடைய அதிக சிரத்தையெடுத்து பீடு நடை போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நம்மை சார்ந்த சங்கங்கள் தொடர்ந்து விவேகமற்ற விவாதங்களில் திளைத்திருப்பது தேவையற்றது.