பரவலாகி வரும் வீடியோவிற்குக் கணபதியின் மரணத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை – போலீசார் மறுப்பு

இரண்டு நபர்கள் தாக்கப்பட்டதைக் காட்டும் சி.சி.டி.வி. காட்சிகள், போலிஸ் தடுப்புக் காவலின் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காலை இழந்து மரணமடைந்த கணபதியுடன் தொடர்பற்றது எனக் கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.

சம்பவத்தின் நம்பகத்தன்மை மற்றும் இருப்பிடம் குறித்து அவரது தரப்பினர் விசாரித்து வருவதாக அரிஃபாய் கூறினார்.

“தடுப்புக் காவலில் தாக்கப்பட்ட கணபதி, செலயாங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்று கூறி, ஒரு சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

“இந்த விஷயத்தை நான் கடுமையாக மறுக்கிறேன். இந்த வீடியோ பதிவை பகிர்ந்துவரும் பொறுப்பற்ற தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போது விசாரணையில் உள்ள கணபதி வழக்குடன், இந்தக் காட்சிகளை இணைக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

அந்த 45 வினாடி காட்சிகளில், ஓர் அறையின் மூலையில் இரண்டு ஆண்களைச் சுற்றி வளைத்து நின்றுகொண்டிருக்கும் எட்டு ஆண்கள் காட்டிகிறது.

கிட்டத்தட்ட காட்சிகள் முழுவதும், நீல நிற சட்டை அணிந்த ஒருவர், இரப்பர் குழாய் போல தோற்றமளிக்கும் ஒரு பொருளினால், அவ்ருவரையும் தாக்கியதைக் காண முடிந்தது. மற்ற ஆண்கள் அதனைப் பார்த்துகொண்டிருந்தனர்.

இது ஒரு சிறிய அறையில், 2021 ஜனவரி 28-ம் தேதி நடந்ததாக அந்த வீடியோ காட்டுகிறது.

கணபதி, 40, பிப்ரவரி 24-ல், அவரது சகோதரர் மீதான விசாரணைக்கு உதவ போலீசாரால் கைது செய்யப்பட்டு, மார்ச் 8-ம் தேதி விடுவிக்கப்பட்டார்.

பின்னர், அவர் செலயாங் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்டு ஏப்ரல் 18-ம் தேதி இறந்தார்.

ஓர் இரப்பர் குழாயால் போலீசார் தன்னைத் தாக்கியதாக, தனது மகன் இறப்பதற்கு முன் தன்னிடம் கூறியதாக கணபதியின் தாயார் எஸ்.தனலெட்சுமி, 60, தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காவல்துறையினர் காத்திருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெறும் என்றும் அரிஃபாய் தெரிவித்தார்.