தென் கிள்ளான் காவல் நிலையத்தில் மற்றொரு மரணம், ‘ஏதோ தவறு நடக்கிறது’ – வழக்கறிஞர் சந்தேகம்

தென் கிள்ளான் மாவட்டப் போலிஸ் தலைமையகத்தில், ஒரு கைதி கைது செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, நேற்று இறந்து போனார் என்று அவரின் குடும்ப வழக்கறிஞர் எம் மனோகரன் தெரிவித்துள்ளார்.

36 வயதான உமர் ஃபாரூக் அப்துல்லா @ ஹேமநாதனின் மரணம் தொடர்பாக, “நிச்சயமாக தவறு ஏதோ நடந்து” இருப்பதாக வழக்கறிஞர் கூறினார், மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

உமரைக் கைது செய்வதற்காக, ஐந்து காவல்துறை அதிகாரிகள் நேற்று முந்தினம் கோல சிலாங்கூரில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்ததாக உமரின் மனைவி ஹுமைரா அப்துல்லா @ கண்ணகி, 25, தன்னிடம் தெரிவித்ததாக மனோகரன் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அன்று மாலை, 4 முதல் 5 மணி அளவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று காலை 10 மணியளவில், தனது கணவர் நீண்ட நேரம் சாப்பிடாததால் உணவு கொண்டு வருமாறு போலீசாரிடம் இருந்து ஹுமைராவுக்கு அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.

“தென் கிள்ளான் மாவட்டத் தலைமையகத்திற்கு வந்த பிறகு, காத்திருக்கும்படி அவரிடம் கூறப்பட்டது.

“நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னர், மாலை 3.30 மணியளவில், அக்காவல் நிலையத்தின் போலிசார் ஒருவர் தனது கணவர் இறந்துவிட்டதாக கூறியதாக அவரின் மனைவி சொன்னார்.

“அதிர்ச்சியில் உறைந்து போன அவர், கட்டுக்கடங்காமல் அழுதுள்ளார். பின்னர் சட்ட ஆலோசனைக்காக என்னை அவர் தொடர்பு கொண்டார்,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

உமர் கீழே விழுந்துள்ளார் என்று ஹுமைராவிடம் காவல்துறை கூறியதாக மனோகரன் கூறினார்.

“அவர் இதை நம்பவில்லை. தனது கணவன் குழந்தைகளை மிகவும் நேசிப்பவர் என்றும், தான் நேசித்த அனைவரையும் தனியாக விட்டுவிட்டு அவர் இறந்துபோக சாத்தியம் இல்லை என்றும் ஹுமைரா தெரிவித்தார்,” என்று மனோகரன் கூறினார். அந்தத் தம்பதியருக்கு ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

இதற்கிடையில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மனோகரனிடம், கிள்ளான் நீதிபதி உமருக்கு எதிராக நான்கு நாள் ரிமாண்ட் உத்தரவை நேற்று வழங்கியதாகவும், உமர் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

“இங்கே ஏதோ தவறு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். இது நிச்சயமாகச் சரியில்லை.

“உமர் ஃபாரூக்கின் மரணத்திற்கான பொறுப்பை நான் காவல்துறை மீது வைக்கிறேன். உமர் ஃபாரூக்கின் மரணத்திற்குக் காரணமான காவல்துறை மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன்.

“தொடர்ந்து போலிஸ் தடுப்புக் காவலில் நிகழும் இறப்புகளுக்கு தேசியக் காவற்படை தலைவர் பதிலளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

​​சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி முகமது, சிலாங்கூர் காவற்படையைச் சேர்ந்த ஒரு குழு இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும், உமரின் மரணம் குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் மலேசியாகினியிடம் தொடர்பு கொண்டபோது கூறினார்.

போலிஸ் நடவடிக்கை மற்றும் தென் கிள்ளான் மாவட்டத் தலைமையகக் காவலில் நடந்த மரணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆக அண்மைய மரணம் உமரின் மரணம் ஆகும்.

2017-ஆம் ஆண்டில், தென் கிள்ளான் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில், விசாரணையின் போது மருத்துவப் பிரச்சினைகள் குறித்து புகார் அளித்த ஜி கணேஸ்வரன் மருத்துவமனையில் இறந்து போனார்.

சுயநினைவை இழப்பதற்கு முன்பு, தன்னைத் தொண்டையில் உதைத்தனர் என்று கணேஸ்வரன் கூறியதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர், ஆனால் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்பதால் துன்புறுத்தலுக்கான எந்தக் கூறுகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

2019-ஆம் ஆண்டில், மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் சிலவற்றில் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக, அதே மாவட்டத் தலைமையகத்தில், 18 மற்றும் 24 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் காவல்துறையினரால் சித்திரவதைச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும், விசாரணையின்றி தடுத்து வைக்க அனுமதிக்கும், 1959-ஆம் ஆண்டு குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.

அக்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாகப் போலீசார் உறுதியளித்தனர்.