குடிநுழைவு கைதிகள் மீது கிருமிநாசினி தெளிப்பு – சுகாதார வல்லுநர்கள் கண்டித்தனர்

நேற்று முன்தினம், குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது ஆவணமற்ற வெளிநாட்டினர் மீது கிருமிநாசினிகளைத் தெளித்ததற்காக, அதன் அதிகாரிகளைப் பல சுகாதார வல்லுநர்கள் கீச்சகத்தின் மூலம் கண்டித்தார்.

சைபர்ஜெயாவில் நடந்த சோதனையின்போது, கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் சோதனையில் பங்கேற்ற குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மீது டெட்டோல் கிருமிநாசினியைத் தெளித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த கண்டனங்கள் எழுந்தன.

“இது அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற மற்றும் ஆபத்தான செயலாகும்,” என்று கூறிய குழந்தைகள் மருத்துவ வல்லுநர் டாக்டர் அமர்-சிங் எச்.எஸ்.எஸ்., சுகாதார அமைச்சு அதில் தலையிட வேண்டுமென வலியுறுத்தினார்.

“அவர்கள் மனிதர்கள். அவர்கள் மீது அதைத் தெளித்தது பொருத்தமானது அல்ல,” என்றார் அவர்.

உலகச் சுகாதார அமைப்பு (WHO) அறிவியல் மன்ற உறுப்பினர், டாக்டர் அடீபா கமருல்ஸமான், பொது துப்புரவு நடவடிக்கைகள் கோவிட் -19 தொற்றின் தற்போதைய புரிதலுடன் ஒத்துப்போகவில்லை என்று கடுமையாக விமர்சித்தார், மேலும் இந்தச் சம்பவம் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

“எனக்கு உண்மையில் வார்த்தைகள் வரவில்லை. நமது மனிதநேயம் எங்கே போய்விட்டது?” என்று அவர் கேட்டார்.

பதிவு செய்யப்படாத வெளிநாட்டினர் மீது கிருமிநாசினிகளைத் தெளித்ததைக் கண்டித்த கீச்சகப் பயனர்களில் அவர்களும் அடங்குவர்.

இந்த நடவடிக்கை கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது; இது உதவாது என்பதோடு, ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் விவரிக்கப்பட்டது.

கைகளில் மட்டுமே தெளிக்கப்பட்டதாக மற்ற நெட்டிசன்கள் கூறியபோது, ​​அது பொருத்தமான நடவடிக்கை என்று கூறிய அடீபா, ஆனால் வெளிநாட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மலேசியாவின் கோவிட் -19 தடுப்பூசி பிரச்சாரத்திற்குப் பயனற்றது என்று கருதுவதாகச் சொன்னார்.

“எல்லாமே மிகவும் மனிதாபிமானமற்றவை, அவர்களின் கண்ணியத்தைக் கொள்ளையடிக்கும் செயல்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், சோதனையின்போது அதிகாரிகள் தலை முதல் கால் வரை கிருமிநாசினி தெளித்ததைக் குடிநுழைவு திணைக்கள வீடியோ காட்டியது, அதே நேரத்தில் மலேசியா கேஸட் பதிவுகள் சில கைதிகள் மீது உடலிலும் கைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதைக் காட்டியது.

இதற்கிடையில், குடிநுழைவுத் துறை, தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நேற்று, தனது நடவடிக்கையை ஆதரித்து அறிக்கை வெளியிட்டது.

சோதனையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆவணமற்ற வெளிநாட்டினர் மீது மட்டுமல்ல, குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் கைருல் டிஸைமி டாவுட் உட்பட, சோதனையில் பங்கேற்ற அத்திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகள் மீதும் டெட்டோல் தெளிக்கப்பட்டதாக அது கூறியது.

“கோவிட் 19 நோய்த்தொற்றை ஒழிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, இந்தத் திடீர் சோதனை எடுக்கப்பட்டது, ஏனெனில் அவர்களின் குடியிருப்புகள் மிகவும் அழுக்கான, நெரிசலான நிலையில் உள்ளன.

“மலேசியக் குடிநுழைவுத் துறையின் நல்ல பெயரைக், கெடுக்கும் நோக்கத்துடன் வெளியிடப்படும் அறிக்கைகளையும் எழுத்துக்களையும் நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களை நாங்கள் சிறந்த முறையில் கவனித்து கொள்கிறோம்; உணவு வழங்குவது, ஆவணத் திரையிடல் செயல்பாட்டின் போது கழிப்பறை வசதிகள், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் முடிந்தவரை ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என்று குடிநுழைவுத் துறை வலியுறுத்தியது.

பதிவைப் பொறுத்தவரை, கோவிட் -19 தடுப்பின் ஓர் அம்சமாக, ஆல்கஹால் அடிப்படையிலான சோப் அல்லது க்ளென்சரைக் கொண்டு அடிக்கடி கைக் கழுவ வேண்டும் என்று உலகச் சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது; ஆனால், கிருமிநாசினியை ஒருவர் மீது தெளிப்பது “எந்தச் சூழ்நிலையிலும் பரிந்துரைக்கப்படவில்லை” என்று கூறுகிறது.

“இது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும், மேலும் நீர்த்துளிகள் அல்லது தொடர்புகள் மூலம் ஒருவருக்கு கிருமி பரவுவதை அது குறைக்காது.

“மேலும், குளோரின் மற்றும் பிற நச்சு இரசாயனங்களை ஒருவர் மீது தெளிப்பதால், கண் மற்றும் தோல் எரிச்சல், அதன் வாடை உள்ளிழுக்கப்படுவதால் மூச்சுக்குழாய் அழற்சி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற இரைப்பை குடல் விளைவுகளும் ஏற்படலாம்,” என்று அவர் மே 15, 2020 அன்று வெளியிட்ட வழிகாட்டுதல்களில் அது கூறியுள்ளது.

தற்போது, உலகச் சுகாதார நிறுவனம் கிருமிநாசினிகளை மேற்பரப்பு சுத்தம் செய்வது உட்பட, வீடுகளின் உட்புறம் அல்லது வெளியில் தெளிக்க பரிந்துரைக்கவில்லை.

“கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டால், அது ஒரு துணியால் செய்யப்பட வேண்டும் அல்லது கிருமிநாசினியில் நனைத்து துடைக்க வேண்டும்,” என்று அது அசுத்தமான மேற்பரப்புகளைச் சுத்தம் செய்வதைக் குறிப்பிட்டுக் கூறியது.

கோவிட் -19 தொற்றை ஏற்படுத்தும் கிருமியைக் கொல்ல, அதன் ஆண்டிசெப்டிக் திரவம் மற்றும் கிருமிநாசினி தெளிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று டெட்டோல் அதிகாரப்பூர்வத் தயாரிப்பு வலைத்தளம் கூறுகிறது.

இருப்பினும், தயாரிப்பு விவரச்சீட்டின் அறிவுறுத்தல்களின்படி அது பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், ஊசி, வாயில் செருகல் அல்லது பிற வழிகளில் மனித உடலில் அது செலுத்தப்படக்கூடாது என்றும் அது வலியுறுத்துகிறது.

இந்தத் தயாரிப்புக்கான இணையதளத்தில், பயன்படுத்துவதற்கான வழிமுறைகளில், மனித உடலின் எந்தப் பகுதியிலும் அதைத் தெளிப்பது பற்றி குறிப்பிடவில்லை.

அதற்கு பதிலாக, அந்தக் கிருமி நாசினி திரவத்தைக் காயங்களைச் சுத்தப்படுத்த, குளிக்க அல்லது பிரசவத்தை எளிதாக்கும் போது வெளிப்புறக் கிருமி நாசினியாக பயன்படுத்த முடியும் என்று அந்த வலைத்தளம் கூறுகிறது.

கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள் கதவு கைப்பிடிகள், குளியல் திரைச்சீலைகள் மற்றும் மெத்தை போன்ற இடங்களில் மட்டுமே மேற்பரப்பு கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்படுகின்றன.