டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பினாங்கு டிஏபி துணைத்தலைவரான பி.ராமசாமியை கடுமையாக சாடிப் பேசியதுடன் “கோட்ஃபாதர்” என்று கூறியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பினாங்கு டிஏபி பேராளர் கூட்டத்தில் உரையாற்றிய கர்பால், ராமசாமி “முறையாக நடந்துகொள்ள வேண்டும்” என்றும் கட்சியின் வளர்ச்சிக்கு மூத்தோரின் பங்களிப்பை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ராமசாமி பினாங்கின் 2ஆம் முதல்வராக இருந்தாலும் மூத்தவர்களை மதிக்க வேண்டும். கட்சியின் முதல் இடம் (தலைவர் பதவி)கூட மாறக்கூடியதுதான் என்றார் கர்பால்.
“டிஏபியை வளர்த்து விட்டது யார்? மூத்த தலைவர்கள்தான் அதைக் கட்டிக்காத்து வளர்த்தார்கள். அந்த மூத்த தலைவர்களின் தியாகங்களை மறக்கலாகாது.
“மூத்த தலைவர்களின் தியாகங்களின்றி கட்சியே இந்த அளவு வளர்ந்திருந்திருக்காது. அந்த மூத்தவர்களின்றி இன்றைய தலைவர்களும் தலைவர்களாக உருவாகி இருக்க முடியாது”, என்றாரவர்.