`தாசிக் சினி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்னர், சுரங்கத் தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை’

2019 மார்ச் 13-ல், பெக்கான், தாசிக் சினியின் 4,600 ஹெக்டேர் பரப்பளவிலான இடம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வர்த்தமானி செய்யப்பட்ட பின்னர், சுரங்கத் தொழிலுக்காக புதிய உரிமங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனப் பஹாங் நில மற்றும் சுரங்க அலுவலகம் (பி.தி.ஜி.) தெரிவித்துள்ளது.

இன்று, பஹாங் பி.தி.ஜி. வெளியிட்ட அறிக்கையின்படி, வர்த்தமானி செய்யப்படுவதற்கு முன்பு 14 உரிமங்கள் வழங்கப்பட்டன, அவற்றில் இரண்டு மட்டுமே செயல்படுகின்றன.

ஓர் உரிமம் இந்த மாத இறுதியில் காலாவதியாகும், அதே நேரத்தில் மற்றொரு குத்தகைதாரரின் உரிமம் இவ்வாண்டு இறுதியில் காலாவதியாகும்.

“தாசிக் சினி பகுதியில் புதிய உரிமங்கள் வழங்கப்படமாட்டாது எனவும், குத்தகைதாரர்கள் நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறினால் அதில் சமரசம் கொள்ளமாட்டோம் என்றும் மாநில அதிகாரப் பிரிவு (பிபிஎன்) உறுதிபூண்டுள்ளது.

“ஜூன் 17, 2020 அன்று, சுரங்க ஒப்புதலின் நிபந்தனைகளுக்கு இணங்காததற்காக தாசிக் சினி பகுதியில் உள்ள 11 குத்தகைதாரர்களுக்கு பிபிஎன் உடனடி வேலை நிறுத்த உத்தரவை பிறப்பித்தது,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்க நடவடிக்கைகளுக்கு இணங்க மதிப்பிடுவதில், மாநில மற்றும் மத்திய அரசுகளைச் சேர்ந்த எட்டு தொழில்நுட்ப முகவர் நிறுவனங்கள் உள்ளன, இதில் கனிம மற்றும் புவி அறிவியல் துறை (ஜேஎம்ஜி), பஹாங் மாநில வனவியல் துறை (ஜேபிஎன்பி) மற்றும் சுற்றுச்சூழல் துறை (ஜேஏஎஸ்) ஆகியவைவும் அடங்கும்.

நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (ஜே.பி.எஸ்), நிலம் மற்றும் மாவட்ட அலுவலகம் (பி.தி.டி), நீர் ஒழுங்குமுறை ஆணையம், மாநில வனவிலங்கு துறை (ஜே.பி.என்) மற்றும் பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்) ஆகியப் பிற துறைகளும் அடங்கும்.

கூடுதலாக, 2020 ஜூலை 20-ம் தேதி, தாசிக் சினியில் சுரங்க நடவடிக்கைகளை அங்கீகரிப்பதற்கான நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டியத் தீர்வு நடவடிக்கைக்கான எஸ்ஓபி நடைமுறைகளையும் பிபிஎன் வெளியிட்டுள்ளது.

“தெளிவான எல்லை நிர்ணயம், மரங்களை மீண்டும் நடவு செய்தல், இயந்திரங்களைப் பயன்படுத்துவதைப் பதிவு செய்தல், RM250,000 உத்தரவாதப் பத்திரம் வசூலித்தல் மற்றும் அமலாக்க குழுவினருக்கு இடுகைகளை வழங்குதல் போன்ற அனைத்து அறிவுறுத்தல்களும் பின்பற்றப்பட்ட பின்னரே அவர்கள் செயல்பட அனுமதிக்கப்படுவர்.

“ஜேபிஎன்பியும் நவம்பர் 18, 2019 முதல் டிசம்பர் 30, 2019 வரை, தாசிக் சினி பகுதியில் 1.2 ஹெக்டேர் பரப்பளவில், RM 250,000 மதிப்புள்ள புனர்வாழ்வு பணிகளை மேற்கொண்டுள்ளதோடு மரக்கன்றுகளையும் நடவு செய்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2005 முதல், தாசிக் சினியின் 15 நீர் கண்காணிப்பு நிலையங்களில் நீர் தரத்தைக் கண்காணித்து வருகிறது, மேலும் கண்காணிப்பின் முடிவுகள் நீரின் தரம் அனைத்து நீர்வாழ் உயிரினங்களுக்கும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான மட்டத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

கூடுதலாக, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, 2015 முதல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (இஐஏ) அறிக்கையைத் தயாரிப்பதற்கான உத்தரவையும் ஜே.ஏ.எஸ். அமல்படுத்தியுள்ளது.

-பெர்னாமா