லிம்: அடுத்த ஒரு மாதத்திற்குள் பினாங்கு ஆட்சிமன்ற உறுப்பினர்கள் சொத்துக்களை அறிவிப்பர்

பினாங்கில் 2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பக்காத்தான் ராக்யாட் ஆட்சியில் அமருவதற்கு முன்னர் தங்களது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பதை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.

அந்த சொத்து விவரங்களை கூடின பட்சம் ஒரு மாதத்திற்குள் இணையத்தில் அறிவிக்க இயலும் மாநில ஆட்சி மன்றம் நம்புவதாக அந்த டிஏபி தலைமைச் செயலாளர் கூறினார்.

தூய்மையான அரசாங்கத்தை நடத்துவதால் மக்களிடத்திலும் முதலீட்டாளர்களிடத்திலும் புதிய நம்பிக்கை  உணர்வு தோன்றியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

அந்த நம்பிக்கையினால் வரலாற்றில் முதன் முறையாக கடந்த ஆண்டு 12.24 பில்லியன் ரிங்கிட் முதலீட்டுடன் மலேசியாவில் அதிக முதலீடுகளைக் கவர்ந்த தலையாய மாநிலமாக பினாங்கு திகழ்கிறது என்றும் லிம் குறிப்பிட்டார்.

கடந்த 45 ஆண்டுகளில் டிஏபி இரட்டை வெற்றிகளை அடைந்துள்ளது என்ற அவர், அரசாங்கத்தில் பங்காளியாகியது அவற்றுள் ஒன்று எனக் குறிப்பிட்டார். இரண்டாவதாக நல்ல ஆளுமையைத் தந்து அது தனது ஆற்றலையும் மெய்பித்துள்ளது என்றார் அவர்.

“நாம் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டிருந்த வேளையில் நமது தலைவர்களும் உறுப்பினர்களும் பிஎன் அரசாங்கத்தினால் வேட்டையாடப்பட்டனர். ஒடுக்கப்பட்டனர். பிஎன்-னுக்கு மாற்றாக விளங்கி சிறந்த மலேசியாவை உருவாக்கும் கனவைக் கண்டதற்காக நாம் சிறுமைப்படுத்தப்பட்டோம். அவமானப்படுத்தப்பட்டோம்,” என அவர் பட்டர்வொர்த்தில் மாநில டிஏபி ஆண்டு மாநாட்டில் கூறினார்.

“டிஏபி அதிகாரத்தை நோக்கி சென்றதில் முக்கியமான வரலாற்றுப்பூர்வமான பங்காற்றிய அவர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். அவர்களது தியாகங்களும் பங்களிப்பும் இல்லாவிட்டால் நாம் இன்று இருக்கும் நிலையில் அடைந்திருக்க மாட்டோம்,” என லிம் வலியுறுத்தினார்.

அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது சிரமம்

மாநில டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமிக்கும் தேசியத் தலைவர் கர்பால் சிங்-கிற்கும் இடையில் மோதல்கள் அதிகரித்து வரும் வேளையில் லிம் ஆற்றிய உரை பொருத்தமான நேரத்தில் நிகழ்த்தப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

மாநாடு நடைபெறும் இடத்துக்கு வெளியில் இன்று காலை ராமசாமி ஆதரவாளர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தது பூசலை மேலும் சூடு பிடிக்கச் செய்து விட்டது.

“ஞானாசிரியர்” கருத்தைத் தெரிவித்த ராமசாமியை கர்பால் தமது உரையில் கடுமையாகச் சாடினார்.

அதிகாரத்தை வெல்வதும் சிரமம். ஆனால் அந்த அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் அதே அளவுக்குச் சிரமமானது என்றும் லிம் தமது உரையில் உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தினார்.

“நாம் நமது அனுபவக் குறைவை மட்டுமின்றி நமது அரசியல் எதிரிகளையும் ஆளுவதற்கு நமக்கு உள்ள ஆற்றலில் சந்தேகம் கொண்டிருந்த நமது ஆதரவாளர்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது.”

“கடந்த 4 ஆண்டுகளாக நாம் அதிகாரத்தில் இருந்த போது இனம், சமயம், அரசியல் பின்னணி எதுவாக இருந்தாலும் அனைவரையும் சமமாக நடத்தி திறம்பட ஆட்சி செய்ய முடியும் என்பதை மெய்பித்துள்ளோம்,” என்றும் அவர் சொன்னார்.

பினாங்கு மாநில பக்காத்தான் அரசாங்கம் ஹுடுட் சட்டத்தை அமலாக்காது என லிம் வலியுறுத்தினார். என்றாலும் இஸ்லாத்துக்கான ஒதுக்கீடுகளை அது அதிகரித்துள்ளது. மக்கள் சமயப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியையும் கூட்டியுள்ளது என்றார் அவர்.

பகுதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி உதவிகளை மாநில அரசாங்கம் வழங்குவதாகவும் லிம் சொன்னார். முஸ்லிம் அல்லாத விவகாரங்களைக் கவனிப்பதாக ஆட்சிமன்ற உறுப்பினர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அரசாங்கம் பள்ளிக்கூடங்களுக்கும் கோயில்களுக்கும் நிலம் கொடுத்துள்ளது. இந்து அறவாரியத்துக்கு ஆண்டுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் நன்கொடையையும் அது வழங்கி வருவதாகவும் பினாங்கு முதலமைச்சர் சொன்னார்.

TAGS: