ராமசாமி: “நான் டிஏபி-யை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன்”

பினாங்கு டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி,  தமது “ஞானாசிரியர்” கருத்து மீது கட்சியின் மத்திய நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டால் கட்சியிலிருந்து விலகுவதற்குத் தயாராக இருப்பதாக கூறுகிறார்.

என்றாலும் தமது கருத்து கட்சித் தலைவரைக் குறி வைத்து சொல்லப்படவில்லை என அவர் வலியுறுத்தினார்.

தாம் எந்த டிஏபி தலைவரையும் சிறுமைப்படுத்தவில்லை என்றும் சர்ச்சைக்குரிய அந்தக் கருத்தின் மூலம் அவர்களை குறை கூறும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் பினாங்கு துணை முதலமைச்சர் II பதவியையும் வகிக்கும் ராமசாமி சொன்னார்.

அந்தக் கருத்தினால் அவமானப்படுத்தப்பட்டதாக கருதி ராமசாமி அதனை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரியுள்ள டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-குடன் பேச்சு நடத்தத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

“அவசியமானால் நான் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். நான் வெறும் சாதாரண மனிதன் அல்ல. எனக்கும் கௌரவம் உண்டு.”
 
“அந்த விவகாரம் மீது நான் கட்சியை விட்டு விலக வேண்டும் என்றால் நான் விலகுவேன்”, என அவர் இன்று பினாங்கில் நிகழும் மாநில டிஏபி மாநாட்டில் ஆயிரம் பேராளர்களிடம் கூறினார்.

“எனக்கு அதிகாரத்திலோ பதவிகளிலோ ஆர்வம் இல்லை. என் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாலும்  சதி செய்வதாக கூறப்படுவதாலும் நான் இதனைச் சொல்கிறேன்,” என ராமசாமி தொடர்ந்து கூறினார்.

TAGS: