நாடாளுமன்றம் : 26 ஜூலை ‘சிறப்பு அமர்வு’, 6 செப்டம்பரில் முழு அமர்வு

மக்களவையின் முழு அமர்வு செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் அஸார் அஸீஸான் ஹருண் தெரிவித்தார்.

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2 வரையில், அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மக்களவையின் சிறப்பு அமர்வு என்று அவர் விளக்கினார்.

மக்களவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்புக் கூட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அஸார் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“2021, ஜனவரி 11 தேதியிட்ட அவசரகாலப் பிரகடனம், இன்னும் நடைமுறையில் இருந்தாலும், பிரதமர் கூட்டத்தை நடத்த, மாமன்னர் அனுமதி அளித்திருப்பதாக எனக்குத் தெரியவந்துள்ளது,” என்று அவர் கூறினார் கூறினார்.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி அவசரநிலை முடிவடையும்.

14-வது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டமான முழு மாநாடு, செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கும் என்று ஒரு தனி அறிக்கையில் அஸார் தெரிவித்தார்.

முதல் மாநாடு, செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 30 வரை, மொத்தம் 15 நாட்களுக்கு நடைபெறும்.

இரண்டாவது மாநாடு, அக்டோபர் 25 முதல் டிசம்பர் 16 வரை 32 நாட்கள் நடைபெறும்.

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரிஅயாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா செப்டம்பர் 6-ஆம் தேதி மாநாட்டைத் தொடக்கி வைப்பார்.