பகடைக்காய்களான மாணவர்கள்

“நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்“- மாவீரன் அலெக்ஸாண்டர்

‘மரத்திலேறி விழுந்தவனை மாடேறி மிதித்தது’ என்ற முதுமொழியானது. இன்று எமது நாட்டின் மாணவச் செல்வங்களுக்கே சாலப் பொருந்தியுள்ளது. கொரோனா என்ற வைரஸ் தொற்றால், கடந்த ஒன்றரை வருடங்களாக தமது கற்றல் செயற்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், நிகழ்நிலைக் கல்வி அதாவது, இணையவழி என்ற ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பாலர் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகம் வரை அனைவரும் இந்த முறை ஊடாகவே திருப்தியோ,  அதிருப்தியோ கட்டாயமாக கற்க வேண்டும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஐயோ! கொரோனாவால் பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதால் எங்கே எமது பிள்ளைகள் பாடசாலை, கல்வி, பாடம் உள்ளிட்ட பாடசாலை கட்டமைப்பையே அடியோடு மறந்து விடுவார்களோ என்ற பெற்றோரின் அச்சத்தை, நிகழ்நிலைக் கல்வியே  போக்கியது எனலாம்.

பாடசாலை சீருடையுடன், பாடசாலை வகுப்பறைகளுக்குச் சென்று, வகுப்பறையில் ஆயிரம் சேட்டைகள் விட்டு, ஆசிரியர்களிடம் திட்டு வாங்கி, நண்பர்களுடன் ஆடிப்பாடி, குறும்புகள் பல செய்து, கற்கும் முறையில் உள்ள திருப்தி, இந்த நிகழ்நிலைக் கற்றலில் முழுமையாக இல்லை என்றாலும் ஏதோ கற்றலை முழுமையாக மறந்து விடாமல் நினைவுப்படுத்திக்கொள்ள இந்த நிகழ்நிலைக் கல்வியும் அவசியம் என்பதை இந்தக் கொரோனா உணர்த்தியுள்ளது.

ஆனால், இந்த நிகழ்நிலைக் கல்விக்கும் கடந்த ஆறு நாள்களாக சாவு மணி அடிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களும் அவர்களைப் பெற்றவர்களும்  பாரிய மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதை எவரும் அறியவில்லையா?

ஒன்றரை வருடங்கள் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், அவர்களின் எதிர்காலம் என்பன பல வருடங்கள் பின்னோக்கி செல்லப்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், கற்றலுக்காக அவர்களுக்கு இருந்த ஒரே வழியும் இப்போது பறிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்னும் இரண்டொரு மாதங்களில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும், தமது எதிர்காலத்தின் இலக்கு, தமது வாழ்வுக்கான மிகப்பெரிய அத்திவாரமாகக் கருதும் உயர்தரம்,   சாதாரண தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களும் இன்று நிகழ்நிலைக் கல்வி இடைநிறுத்தத்தால் செய்வதறியாது, விழி பிதுங்கி நிற்கின்றனர்.

தமது  பிள்ளைகளின் எதிர்காலமே இந்தப் பரீட்சைகளில் தான் உள்ளதால் அவர்களின் எதிர்காலமே சூனியமாகிவிடுமோ என எண்ணி, பெற்றோர் படும்பாடு எவருக்கும் புரியவில்லையா?

கொரோனாவால் முழு உலகமும் முடங்கியிருந்த நிலையில், அரசாங்க தொழில் அன்றி, ஏனைய தொழில்களில் ஈடுபடுபவர்கள் தொழில்களுக்குச் சென்றால் மாத்திரமே சம்பளம் கைக்கு வரும் என்ற நிர்ப்பந்தத்தில், கொரோனாவால் அவர்களின் பொருளாதார வழிகளுக்கும் ஆப்பு விழுந்தாலும், தமது பிள்ளைகள் படிக்க வேண்டுமே என எண்ணி, அவர்களின் எதிர்காலமே கல்வியில் மாத்திரம் தான் தங்கி உள்ளதென கருதி, கடந்த ஒன்றரை வருடங்களில் பெற்றோர் நிகழ்நிலைக் கல்விக்காக வாங்கிக்கொடுத்த, திறன்பேசிகளுக்கும்  வாங்கிக்கொடுத்த பெற்றோரின் கஸ்டங்களும் இன்று பலனற்றுப் போயுள்ளன.

குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுடன் சாதாரண அன்றாட கூலித் தொழிலாளியாகவோ தோட்டத்தொழிலாளியாகவோ, ஓட்டோ ஓட்டுபவர்களாகவோ வர்த்தக நிலையங்களோ திறந்தால் தான் கையில் நான்கு காசைப் பார்க்கலாம் என்ற நிலையிலும் நிகழ்நிலைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, நாளொன்றுக்கு செல்வாகும் டேட்டா கட்டணங்களை செலுத்தி, தமது பிள்ளைகளை நிகழ்நிலை கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட வைத்த பெற்றோர்கள் கடந்த ஆறு நாள்களாக என்னபாடு படுவார்கள் என்பதை அவர்களைப் போன்ற பெற்றோரே அறிவர்.

அது மாத்திரமா? நகர்ப் புறங்கள் தவிர்ந்த பின்தங்கிய கிராமங்கள், மலையகத் தோட்டப்புற மாணவர்கள், நிகழ்நிலைக் கல்விக்கான சமிக்ஞைத் தேடி, காடு, மலை, மர உச்சி, வீட்டுக் கூரைகளில் ஏறிய அவலங்களும், பெற்றோரும் அவர்களின் செயற்பாட்டுக்கு துணையாக மலை, மர உச்சிகளில் கூடாரங்களை அமைத்து, தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு செய்த ஒத்துழைப்புகள் புகைபடங்களாக ஊடகங்களில் எத்தனை பேரின் மனங்களை நெகிழச் செய்தன.

மாணவர்கள் மாத்திரம் தான் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனரா? கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களும் எவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கலாம். அவர்களின் கடமைகளையும் பார்த்துக்கொண்டு, சரியான நேரத்தில் பிள்ளைகளுக்கு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக, பல தியாகங்களுக்கு மத்தியில் தான் இக்கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெத்தனர்.

அவர்கள் பெயருக்கு தான் அரசாங்க ஊழியர்கள். விடுமுறை என்றாலும் மாதம் தவறாமல் அவர்கள் கைக்கு சம்பளம் வந்தாலும், இந்நிகழ்நிலைக் கல்விக்கு தேவையான அலைபேசி, டேட்டா கட்டணம் என்பவற்றை தமது சொந்த செலவிலேயே இந்த ஆசிரியர்களே பார்த்துக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கே ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் எவ்வாறு அலைபேசி சமிக்ஞைகளுக்காக காடு, மலை, மரம் ஏறினார்களோ அதேபோல், பல பின்தங்கிய பிரதேசத்திலுள்ள ஆசான்களும் இக்கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கா காடு, மலை, மரமேறியதை எவரும் மறந்துவிடலாகாது.

இவ்வாறான நிலையில், நிகழ்நிலைக் கல்வி செயற்பாடுகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியிருப்பது அவர்களைப் பொறுத்தவரை நியாயமாகவே இருக்கட்டும். போராட்டத்தால் தான் எமக்கான உரிமைகள் உள்ளிட்டவைகளை பெற்றுக்கொள்ளலாம். இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதேபோல் சுதந்திர கல்வியை தனியார் மயப்படுத்தவோ இராணுவமயமாக்கவோ  எடுக்கும் முயற்சிகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, எமது எதிர்கால சந்ததியினருக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் போராடுகின்றனர். அதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

ஆனால், 43 இலட்ச மாணவர்களின் நிலையை ஏன் அதிகார தரப்பும் சரி ஆசிரியர் தரப்பும் சரி நினைத்துப் பார்க்க முன்வரவில்லை. இன்று அதிகார தரப்புக்கும் ஆசிரியர் தரப்புக்கும் மத்தியில் பகடைக் காய்களாக 43 இலட்சம்  மாணவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்ற சந்தேகமும் நிலவுகின்றது.

போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. ஆனால் அது எல்லை மீறும்போது அதனைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அதிகார தரப்பும் பின்னிற்காது.

போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவர்களை விடுவித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியத் தொழிற்சங்கங்கள் நிகழ்நிலை கற்றல் செயற்பாடுகளிலிருந்து விலகி, 43 இலட்சம் மாணவர்கள் அனாதைகளாக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினைகளைத்  தீர்த்து, கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எந்த தரப்பும் சிந்திக்க வில்லை.

மாறாக, ஆசிரிய தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபடுவது தவறு, அவர்கள் நாசமாய்ப் போனவர்கள் என பகிரங்கமான பல்வேறு வசைப்பாடல்களுடன், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றமாட்டோம் என அரசாங்க தரப்பு பிடிவாதம் பிடித்து வருகின்ற நிலையில், எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே நிகழ்நிலைக் கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்போம் என மறுபுறம் ஆசிரியத் தொழிற்சங்கங்களும் விடாப்பிடியாக நிற்கும் நிலையில், இந்த இருதரப்புக்கும் இடையில் சிக்கி செய்தவதறியாது எதிர்காலத்தை தொலைத்து நிற்பது எமது மாணவச் செல்வங்கள் மாத்திரமே என்பதை ஆணித்தரமாக உணர்த்துகின்றோம்.

Tamilmirror