ஹைபிரிட் முறையில் மாநிலச் சட்டசபை கூட்டம் நடத்த சிலாங்கூர் தயார்

நாட்டில் புதிய டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக், கோவிட் -19 தொற்று நிலைமை நிச்சயமற்றதாக இருப்பதால், சிலாங்கூர் மாநில அரசு ஹைபிரிட் (நேரடி & நேரலை) முறையில் மாநிலச் சட்டமன்றத்தைக் கூட்டத் தயாராக உள்ளது.

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருட்டின் ஷாரி, ஹைபிரிட் முறை சந்திப்பு தேவைப்பட்டால், அந்த அமர்வின் சட்டம் அல்லது அது தொடர்புடைய விதிகளைத் திருத்துவதற்கு முன்மொழிய தயார் என்றார்.

ஹைபிரிட் சந்திப்பைச் சட்டப்பூர்வமாக நடத்த இது அவசியம் என்று அவர் கூறினார்.

“திருத்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான எங்கள் முயற்சியில் ஹைபிரிட் வழியாக மாநிலச் சட்டசபையைத் தொடருவோம்,” என்று பெர்னாமாவுடனான ஒரு சிறப்பு பேட்டியில் அவர் கூறினார்.

மாநிலச் சட்டசபை அமர்வில் ஈடுபடுவோருக்கான கோவிட் -19 சோதனை விரைவில் நடத்தப்படும் என்றும், இரண்டு மருந்தளவு தடுப்பூசி முடித்த மற்ற அதிகாரிகள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் அமர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமிருதின் கூறினார்.

இதற்கிடையில், `கீத்தா சிலாங்கூர் தொகுப்பு` திட்டத்தின் புதுப்பிப்புகளைப் பற்றி விவாதிக்க, சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) மற்றும் அரசு மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுடன் வலையரங்கம் (webinar) வழியாக ஓர் அமர்வை மாநில அரசு நடத்தி முடித்துவிட்டது என்றார்.

மாநிலப் பட்ஜெட்டில் சாத்தியமான திருத்தங்கள் குறித்தும் இந்த விவாதம் தொட்டுள்ளது, குறிப்பாக ஒரு நிறுவனத்திற்கான ஒதுக்கீட்டில் மாற்றம் தேவை என்றால்.

ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6 வரை, மாநிலச் சட்டசபையைத் திறக்க மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புதல் அளித்ததாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.

அமிருதின் கூற்றுப்படி, சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷாவும், 14-வது சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் 2021-ஆம் ஆண்டின், நான்காவது காலத்தின் முதல் கூட்டத்திற்கு அனுமதி அளித்ததோடு, ஆகஸ்ட் 23-ம் தேதி திறப்பு விழாவை நடத்தவும் ஒப்புக் கொண்டார்.

கேள்வி நேரம் மற்றும் விவாதம் அடங்கிய வழக்கமான வடிவமைப்பை இந்த அமர்வு பின்பற்றும் என்றும், செந்தர இயங்குதல் நடைமுறைகள், சிறப்பு அமர்வில் மட்டுமல்லாமல், தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மாநில அரசின் முயற்சியில் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

– பெர்னாமா