தொகுதி மேம்பாட்டுக்கு துருப்புச்சீட்டாக மாறும் இடைத்தேர்தல்

இராகவன் கருப்பையா- நாளை சனிக்கிழமை சிலாங்கூர், கோல குபு பாருவில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலையொட்டி நம் நாட்டு அரசியல்வாதிகள் கடந்த 2 வார காலமாக அரங்கேற்றும் நாடகங்கள்  கட்சி அரசியலின் யாதார்ததை பிரதிபலிக்கின்றன.

உதாரணத்திற்கு, அவ்வட்டாரத்தில் உள்ள 5  தோட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 245 பேருக்கு 75 மில்லியன் ரிங்கிட் செலவில் வீடு கட்டித் தரப்படும் என வீடமைப்புத் துறை அமைச்சர் ஙா கோர் மிங் கடந்த வாரம் அறிவித்தார்.

நைகல் கார்டனர், மேரி, சுங்ஙை தெங்கி, மிஞ்ஞாக் மற்றும் புக்கிட் தாகார், ஆகிய தோடங்களைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என பி.எஸ்.எம். கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வன் பல்லாண்டுகளாக போராடி வருகிறார். எனினும் கடந்த வாரம் வரையில் இது நிலுவையில் இருந்தது,

ஆனால் தற்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் பட்சத்தில் திடீரென வீறுகொண்டு எழுந்துள்ள அரசாங்கம் , அங்குள்ள தோட்டப் பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என ‘அக்கறையோடு’ அறிவித்துள்ளது.

‘மாண்புமிகு ஙா கோர் மிங்ஙிற்கு நன்றி’ என மலாய் மொழியில் எழுதப்பட்டுள்ள பதாகைகளைக் கூட அவருடையத் தரப்பே எழுதி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுவும் கூட அந்த வீடமைப்புத் திட்டம் வெறும் அறிவிப்புதான். இதுவரையில் அதற்கான முதல் கட்ட நடவடிக்கை எதுவுமே அங்கு தொடங்கப்படவில்லை என நம்பப்படுகிறது. எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வாக்கில் அது நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அந்த காலக்கட்டத்தில், அதாவது 2026ஆம் ஆண்டு வாக்கில் இந்த அமைச்சர் பதவியில் இருப்பாரா அல்லது இந்த அரசாங்கம்தான் ஆட்சியில் இருக்குமா என்று யாருக்குமே தெரியாது.

இதற்கிடையே மறு குடியேற்றம் உள்பட கோல குபு பாரு வட்டார மக்கள் எதிர்நோக்கிய அடிப்படை பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்பட்டு விட்டதாத சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு செய்த அறிவிப்பு மற்றொரு செய்தியாகும்.

இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடியேற்றத்திற்கு தயாராய் உள்ளதைப் போல அவர் பேசியுள்ளார். ஒரே விவகாரத்தை சுட்டிக்காட்டி இரு அரசியல் தலைவர்கள் பேசியுள்ளனர்.

கோல குபு பாருவில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக சுற்றுலாத் துறையமைச்சர் தியோங் கிங் சிங்கும் ஒரு அறிவிப்பை செய்து அங்குள்ளவர்களை அசத்தியுள்ளார்.

அதாவது கோல குபு பாரு வட்டார மக்களுக்கு மின் சுடலையொன்று கட்டித் தரப்படும் என்றார் அவர். நீண்ட நாள்களாக இந்த குறைபாடு கிடப்பில் உள்ளது தமக்குத் தெரியும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் உடனே முடுக்கிவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொகுதி மேம்பாட்டுக்கு இடைத்தேர்தல் என்பது இப்படி ஒரு துருப்புச்சீட்டாக மாறும் மகிமை கொண்டது.