தொற்று அதிகரிப்பு: இந்தியாவிலிருந்து மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி செய்யும் இலங்கை

கொழும்பு: இலங்கையில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. வரும் அக்., மாத மத்தியில் கோவிட் பாதிப்பு உச்சத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இன்று (ஆக., 15) இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்து உள்ளதாவது:

இலங்கையில் எதிர்பார்க்கப்பட்ட உயர்வைவிட பாதி அளவில்தான் கோவிட் பாதிப்பு பதிவாகியுள்ளது. நாட்டில் இதே நிலை நீடித்தால் தினசரி பாதிப்பு வரும் செப்., மத்தியில் 6,000 என்ற அளவில் உயர வாய்ப்புள்ளது. அக்., மத்தியில் இது மேலும் உயர வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய 4 வார கால பொதுமுடக்கத்தை அறிவிக்க உள்ளோம்.

கோவிட் பாதிப்பால் ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 528ஆக இருந்தது, கடந்த வியாழக்கிழமை 646ஆக உயர்ந்தது. இதே நிலை நீடித்தால், மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்தியாவிலிருந்து மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அடுத்த வாரம் இறக்குமதி செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

dinamalar