’தாமதிக்கும் கணங்கள் தலைவிதியை மாற்றும்’

டாக்டர் அசேல குணவர்தன

குறிப்பிட்ட கொரோனா தடுப்பூசிதான் வேண்டும் என்று தெரிவு  செய்ய முயல வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, முதலில் கிடைக்கக்கூடிய முதல் தடுப்பூசியை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

சில மக்களிடையே தடுப்பூசியை தேர்ந்தெடுக்கும் போக்கு காணப்படுகிறது என்றும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஆய்வுகளின்படி, அனைத்து தடுப்பூசிகளும் வைரஸ் மற்றும் மாறுபாடுகளை எதிர்த்துப் போராட  கூடியவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஒவ்வொரு நாளும் இந்த தொற்றுநோய் அதிகரித்து வரும் உலகில் நாம் வாழ்கிறோம், அத்துடன், அதிகமான மக்கள் உயிரிழக்கின்றனர். எனவே, இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான மிக விரைவான வழி விரைவாக தடுப்பூசி போடுவதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் மற்றொரு தடுப்பூசிக்காக காத்திருந்தால், தடுப்பூசி எடுப்பதில் ஏற்படும் தாமதம் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் என தெரிவித்தார்.

கொரோனா மரணங்களை ஆராயும் போது, ​​60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களுக்கே 70 முதல் 80% மரணங்கள் சம்பவித்துள்ளன  என்று சுட்டிக்காட்டினார்.

எனவே, குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருகிலுள்ள மையத்திலிருந்து முதலில் கிடைக்கக்கூடிய தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

Tamilmirror