ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள், நாளை தொடங்கி செப்டம்பர் 1 வரையில் முறையே லிட்டருக்கு RM2.05 மற்றும் RM2.15 ஆக இருக்கும், அதே நேரத்தில் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலை RM2.74-லிருந்து RM2.72-ஆக குறைந்தது.
தானியங்கி விலை நிர்ணய முறை (ஏபிஎம்) உத்தியைப் பயன்படுத்தி, வாராந்திர அடிப்படையில் பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விலையை நிர்ணயிப்பதன் அடிப்படையில், விலை நிர்ணயிக்கப்படுவதாக நிதி அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“உலகச் சந்தையில் உண்மையான எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் விளைவுகளிலிருந்து, நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையைப் பராமரித்துள்ளது. இருப்பினும், இரு பொருட்களின் உண்மையான சந்தை விலை நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு விலையை விட உயர்ந்துள்ளது,” என்று அந்த அறிக்கையி கூறப்பட்டுள்ளது.
உலக கச்சா எண்ணெய் விலை மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
- பெர்னாமா