பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், புதிய அமைச்சரவை பட்டியலை வழங்க இன்று யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாமன்னரை எதிர்கொள்ளும் நிகழ்ச்சி, பகாங், குவாந்தானில் நடைபெறும்.
தி ஸ்டார் இணையத் தளச் செய்தியின்படி, இஸ்தானா நெகாராவின் ஆதாரம் ஒன்று இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியது.
அமைச்சரவை பட்டியல் நேற்று முன்வைக்கப்படவிருந்ததாகவும், ஆனால் அகோங் கோலாலம்பூரில் இல்லாததால் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்மாயில் இன்று பகாங்கிற்கு புறப்பட்டார்.
ஆகஸ்ட் 31-ம் தேதி, மெர்டேகா தின கொண்டாட்டத்திற்கு முன் அமைச்சரவை பட்டியலை இறுதி செய்ய இஸ்மாயிலிடம் கேட்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
அகோங்கிற்கு அமைச்சரவை பட்டியல் வழங்கப்பட்ட பிறகு, பதவியேற்பு விழா விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், இன்று காலை இஸ்மாயிலின் வருகையை உறுதிப்படுத்தினார்.
சமூக ஊடகங்கள் மூலம், குவாந்தானில் உள்ள அரச மலேசிய விமானப்படை தளத்தில், இஸ்மாயிலின் வருகையை வரவேற்க உள்ளதாக வான் ரோஸ்டி கூறினார்.