சடலங்களை விறகுகளை கொண்டு எரியூட்ட அனுமதி கிடைக்கவில்லை! யாழ் அரசாங்க அதிபர்

யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்றினால் இறந்தவர்களை தகனம் செய்வதற்கான நடவடிக்கையில் விறகுகளை கொண்டு எரியூட்டுவதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

தற்போது கோவிட் தொற்றுக்கான மரணவீதம் சற்று கடுதியாக உள்ளதாகவும், யாழ் மாவட்டத்திலே தகனம் செய்வதற்கான நடவடிக்கையினை யாழ் மாநகர சபையிடம் மட்டுமே உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ் மாவட்டத்தின் கோவிட் தொற்று நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் ஊடகசந்திப்பு இன்று இடம்பெற்ற போது அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

முதலில் தகனம் செய்யும் போது மூன்று உடல்கள் தகனம்செய்யப்பட்டது, பின்னர் அந்த எண்ணிக்கை நான்காவும், ஐந்தாகவும் அதிகரித்தது. இதற்கு மேலதிகமாக உடல்களை வவுனியாவுக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கிருந்து அநுராதபுரத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகனம் செய்வதற்கான நடவடிக்கையில் விறகுகளை கொண்டு எரியூட்டுவதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.

மின்தகனம், எரிவாயு போன்ற தகனங்கள் தான் செய்யவேண்டும் என சுகாதாரதரப்பினர் அறிவுறுத்துகின்றனர். மேலும் புதிதாக தகனம் செய்வதற்கான அமைவிடங்களை அமைப்பதற்கான வழிவகைள் இதுவரையும் எற்படுத்தப்படவில்லை.

அதுதொடர்பிலான ஆலோசனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனிடையே, பொதுமக்கள் நாட்டில் அமுலாக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு சட்டத்தினை துஸ்பிரயோகம் செய்யாது தங்களையும் பாதுகாத்து சமூகத்தினையும் பாதுகாக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கையில் முதலாவது தடுப்பூசியினை 2,95,315 நபர்களுக்கும், இரண்டாவது தடுப்பூசியி 2,15,552 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (நன்றி TAMILWIN)

(நன்றி TAMILWIN)