இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் இலங்கையில் உணவுப் பஞ்சமா – உண்மை என்ன?

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவசரநிலை அறிவிக்கப்பட்டபின், அங்கு உணவுப் பஞ்சம் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. செய்கை உரப் பயன்பாட்டிற்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டு, இயற்கை வேளாண்மைக்கு மாறியது, இந்த உணவு பஞ்சத்திற்கான காரணம் எனவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

கோவிட் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பும், உணவு பஞ்சத்திற்கான ஒரு காரணம் என கூறப்பட்டு வருகின்றது. இந்த விடயங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசரகால சட்ட விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை கடந்த 30ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதியை நாடாளுமன்றம் திங்களன்று வழங்கியிருந்தது.

இலங்கையில் செய்கை உர பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த மே மாதம் 6ம் தேதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், செய்கை உர இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து, இலங்கையில் திடீரென உரத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.

கடந்த மே மாதம் முதல் சுமார் ஒரு மாத காலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உரத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

எனினும், வர்த்தமானி அறிவித்தல் காரணமாக இவ்வாறான உர தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும், செய்கை உரங்களை இறக்குமதியாளர்கள் பதுக்கி வைத்தமையே, உரத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட காரணம் எனவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்ட உரத்தை உடனடியாக வெளியில் கொண்டு வந்து, விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்ததன் ஊடாக, விவசாய நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர முடிந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

அதாவது இயற்கை வேளாண்மை முறையைப் பின்பற்றாமல், முன்பு இருந்தது போலவே செயற்கை உரப் பயன்பாடு பழைய நிலைக்கே வந்தது.

தேவைக்கு அதிமாக ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அரிசி

2020ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் 13 லட்சம் ஹெக்டேர் நிலப் பரப்பில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்யப்பட்ட விவசாயத்தின் ஊடாக, 5.3 மில்லியன் மெட்ரிக் டன் நெல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதனூடாக 3.2 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி கிடைத்துள்ளது.

இலங்கையின் மொத்த அரிசி தேவையானது, ஆண்டுக்கு 2.4 மில்லியன் மெட்ரிக் டன் என்ற நிலையில், நாட்டின் தேவைக்கு மேலதிமாக சுமார் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளது என்கிறது இலங்கை அரசு.

இந்த நிலையில், 2021ம் ஆண்டும் அரிசி செய்கை செய்யப்படுகின்றமையினால், உள்நாட்டு பயன்பாட்டிற்கான அரிசி தம்வசம் உள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிடுகின்றது.

விவசாய அமைச்சின் தகவல்களுக்கு அமைய, நாட்டில் தற்போது எவ்விதத்திலும் அரிசிக்கான தட்டுப்பாடு கிடையாது.

எனினும், 100 ரூபாய்க்கு அரிசியை விற்பனை செய்யக்கூடிய நிலைமை காணப்பட்ட போதிலும், 150 ரூபாய் முதல் 225 ரூபாய் வரை அதனை வர்த்தகர்கள் விற்பனை செய்துள்ளதாக விவசாய அமைச்சு கூறுகின்றது.

அதேபோன்று, நாட்டின் அன்றாட தேவைக்காக நாளாந்தம் நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் கிலோகிராம் மரக்கறி விநியோகிக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, நாட்டின் எந்தவொரு இடத்திலும் மரக்கறிக்கான தட்டுப்பாடு கிடையாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

இதேவேளை, நாட்டின் கடந்த காலங்களில் சர்ச்சையை தோற்றுவித்த சர்க்கரை (சீனி) வியாபாரம் குறித்தும், பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

இலங்கையில் சர்க்கரை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்கள், ஒரு கிலோகிராம் சர்க்கரையை 85 ரூபாய்க்கு இறக்குமதி செய்துள்ள நிலையில், அந்த சர்க்கரை சந்தையில் 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

அவசரகால நிலைமை பிரகடனம்

இலங்கையில் கடந்த ஓரிரு மாத காலங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அந்த பொருட்களுக்கான விலை அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக சமையல் எரிவாயு, பால் மா ஆகியவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவிய அதேவேளை, அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றுக்கான விலைகள் பல மடங்குகளாக அதிகரித்திருந்தன.

இவ்வாறான நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கிலேயே, அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசரகால விதிமுறைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமல்படுத்தியிருந்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த அவசரகால அறிவிப்பின் பின்னர், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல என்ற ராணுவ அதிகாரியொருவரையும் ஜனாதிபதி நியமித்திருந்தார்.

இதனையடுத்து, அவசரகால சட்ட விதிமுறைகளுக்கு அமைய, பல்வேறு சுற்றி வளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தும் பல களஞ்சியச் சாலைகளில் சட்டவிரோதமான முறையில், சர்க்கரை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் தலைமையிலான குழு கைப்பற்றியிருந்தது.

இந்த நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த முதலாம் தேதி வரை நடத்தப்பட்ட சுற்றி வளைப்புக்களில் சுமார் 29,900 மெட்ரிக் டன் சர்க்கரை கைப்பற்றப்பட்டதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

கைப்பற்றப்பட்டு, அரசுடமையாக்கப்பட்ட சர்க்க்கரை, கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களில் ஊடாக, நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரான காலத்தில் சந்தையில் தற்போது, ஒரு கிலோகிராம் சர்க்கரை வகைகளின் விலைகள் 116 ரூபாய் முதல் 128 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோன்று, அரிசி வகைகளின் விலைகள் ஒரு கிலோகிராம் 95 ரூபாய் முதல் 125 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது நாட்டில் சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கான தட்டுப்பாடு ஓரளவு குறைவடைந்து, மக்களுக்கு முன்னைய விலையை ஒத்தமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதை காண முடிகின்றது.

எனினும், பால் மா உள்ளிட்ட மேலும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு இன்றைய நிலைமையிலும் தட்டுப்பாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் உணவு பஞ்சம் நிலவுவதாக ஏன் பிற நாடுகள் நினைப்பது ஏன்?

இலங்கையில் தற்போது கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தொடர்ச்சியாகவே செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

எனினும், இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படவில்லை என்பது, இலங்கையிலுள்ள அனைத்து தரப்பினரும் அறிந்த ஒரு விடயமாக காணப்படுகின்றது.

உணவுப் பஞ்சம் நிலவி வருவதாக சர்வதேச ஊடகங்களில் வெளியாகி வரும் செய்தியில் குறிப்பிடப்படுகின்ற விதத்தில் உணவு பஞ்சம் ஏற்படவில்லை என்ற போதிலும், பதுக்கல் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மாத்திரமே நிலவியது.

சர்வதேச ஊடகங்கள் ஏன் இலங்கையில் உணவுப் பஞ்சம் அல்லது பட்டணி நிலவுவதாக செய்திகள் வெளியிட்டன என்பது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளியல் துறை பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தியிடம் பிபிசி தமிழ் வினவியது.

இலங்கை அரசாங்கத்தினால் கடந்த 30ம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில், அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் என்ற வசனம் பயன்படுத்தப்பட்டமையே, இந்த ஊடக அறிக்கைகளுக்காக காரணம் என அவர் கூறுகின்றார்.

அவசரகால விதிமுறைகள் என்பது, சோமாலியா போன்ற நாடுகள் எதிர்நோக்கியுள்ள நிலைமையை, ஒத்ததான பொருளை வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பட்டினி, பஞ்சம் ஆகியன நிலவுகின்ற சந்தர்ப்பத்திலேயே, உலக நாடுகள், இவ்வாறான அவசரகால நிலைமை அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இதன்படி, உணவு விநியோகத்தை சீர் செய்வதற்காக அரசாங்கம், இவ்வாறான அவசரகால நிலைமையை அறிவித்தமையை, உலக நாடுகள் பட்டினி, பஞ்சம் போன்ற பொருளை எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

பஞ்சம் மிகுந்துள்ள நாடுகளில் வாழும் மக்கள், உணவுக்காக கையேந்தும் நிலைமையை எதிர்நோக்கும் போதே, இவ்வாறான அறிவிப்புக்கள் வெளியாகும் என கூறிய அவர், இலங்கையில் அவ்வாறான நிலைமை ஏற்படவில்லை என குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது அமலில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி, உணவு தட்டுப்பாட்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும் என அவர் கூறுகின்றார்.

நாட்டில் கேள்விக்கு ஏற்ற உற்பத்தியை, உள்நாட்டில் உறுதிப்படுத்தி பின்னர், இவ்வாறான தடைகளை அறிவித்திருந்தால், அது சிறந்ததாக அமைந்திருக்கும் என அவர் கூறுகின்றார்.

‘6 மாத காலம் தேவை

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சட்டத்தின் பிரகாரம், அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக 2000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை மாத்திரமே அபராதம் விதிக்க முடியும் எனவும், அதனை அவர்கள் இலகுவாக செலுத்தி விடுவார்கள் எனவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

இதனால், குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதிலும், அதனை திருத்துவதற்கு சுமார் 6 மாத காலம் தேவை என அவர் கூறுகின்றார்.

அவ்வாறு 6 மாத காலம் தாமதித்து, சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் போது, குறித்த அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் பாரிய லாபத்தை ஈட்டுவதுடன், பொதுமக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கி விடுவார்கள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதனாலேயே, அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தி, அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்தார் என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருள் விற்பனையில் மாபியா நிலைமையொன்று உருவாகியுள்ளமையே, உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என அவர் கூறுகின்றார்.

சில அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு தடை

இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சில உணவு பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில், அவ்வாறான பொருட்களின் விலைகளும் பல மடங்காக அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே, மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது.

உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலேயே, மஞ்சளுக்கு தடை விதிக்கப்பட்டதாக அந்த காலப் பகுதியில் அரசாங்கம் அறிவித்திருந்தது.

மக்கள் சிறிது காலம் அர்ப்பணிப்பு செய்தால், உள்நாட்டு விளைச்சல்களை அதிகரிக்க முடியும் என அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஒரு கிலோகிராம் மஞ்சளின் விலை தற்போது 5500 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதை காண முடிகின்றது.

எனினும், மஞ்சள் இறக்குமதிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என ஆளும் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மேலும் பல பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நாட்டில் தொடர்ந்தும் நீடித்த வண்ணமே உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

(நன்றி BBC TAMIL)