2.5 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை

திரட்டப்பட்ட எரிபொருள் இறக்குமதி நிலுவையின் ஒரு பகுதியை ஈடுசெய்ய வெளிநாட்டு காப்புறுதி அல்லது ஓய்வூதிய நிதியிலிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக எரிசக்தி அமைச்சக தரப்புகள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை, இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு, முன்மொழிவுகளை ஆய்வு செய்து, கடன்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முடிவை எடுத்துள்ளது.

எரிபொருள் கொள்முதலுக்காக நிலுவையில் உள்ள வெளிநாட்டு கடன்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்களை விட, திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளுக்கு அதிகமாக இருந்ததால் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது.

தற்போதைய எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து, நேரடியாக கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியத்தை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு பயன்படுத்தக்கூடிய 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீதப்படுத்தும் எதிர்பார்ப்புடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி Tamilwin)